3–ம் ஆண்டு நினைவு தினம்: ஓ.பன்னீர்செல்வம்–டி.டி.வி. தினகரன் 27–ந்தேதி ராமேசுவரம் வருகை

அப்துல் கலாமின் 3–ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வருகிற 27–ந்தேதி துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் வருகை தர உள

Update: 2018-07-23 23:00 GMT

ராமேசுவரம்,

அப்துல் கலாமின் 3–ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வருகிற 27–ந்தேதி துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் வருகை தர உள்ளனர்.

ராமேசுவரம் அருகே பேக்கரும்பு பகுதியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டபம் உள்ளது. இங்கு கலாமின் வாழ்க்கை வரலாறு, அவரது சாதனைகள் அடங்கிய பல புகைப்படங்களும், ஒவியங்களும், அவரது பல கண்டுபிடிப்புகளும் இடம் பெற்றுள்ளது. கலாம் மணிமண்டபத்தை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும், மாணவ–மாணவிகளும் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் வருகிற 27–ந்தேதி அப்துல் கலாமின் 3–ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டாக்டர் மணிகண்டன், கலெக்டர் நடராஜன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்த ராமேசுவரத்துக்கு வருகை தர உள்ளனர்.

இதே போல் அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி அப்துல் கலாம் பவுண்டே‌ஷன் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. ராமேசுவரம் முதல் ராமநாதபுரம் வரை உள்ள 40 பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, மழை நீர் சேகரிப்பு, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பல விதமான போட்டிகள் இன்று முதல் வருகிற 26–ந் தேதி வரை நடத்தப் படவுள்ளது.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடிக்கும் 600 மாணவர்களுக்கு விருதும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. மேலும் நினைவு தின நிகழ்ச்சியில் 1000 மாணவர்களுக்கு இலவச மரக்கன்றுகளும், வீட்டுக்கு ஒரு நூலகம் என்பதை வலியுறுத்தி மாணவர்களுக்கு 500 புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன. இந்த தகவலை கலாமின் பேரனும், கலாம் பவுண்டே‌ஷன் பொறுப்பாளருமா ஷேக் சலீம் கூறினார்.

மேலும் செய்திகள்