கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் திரண்ட பெண்கள்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2018-07-23 22:30 GMT

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்க கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், பட்டா ரத்து மேல்முறையீடு, மின் இணைப்பு தொடர்பான மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் என 274 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக தொழிலாளர் நலத்துறையின் மூலம் 71 பயனாளிகளுக்கு ரூ.1,000 வீதம் ரூ.71 ஆயிரத்திற்கான ஓய்வூதிய ஆணைகளையும், மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணியாற்றி பணியிடை காலத்தில் மரணமடைந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார். இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் இளங்கோ, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் திருப்புவனத்தை அடுத்த தேளி கிராமத்தை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், தேளி கிராமத்தில் சுமார் 150–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்தில் உள்ள அடிகுழாய், ஆழ்துளை கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டிகள் செயல்படாமல் உள்ளன. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். இத்துடன் கால்நடைகளும் தண்ணீர் இன்றி தவிக்கின்றன. எனவே கலெக்டர் இதில் தலையிட்டு குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதேபோன்று நாட்டரசன்கோட்டையை சேர்ந்த செல்லம் என்பவர் கொடுத்த மனுவில், நாட்டரசன்கோட்டையில் புகழ்பெற்ற கண்ணுடையநாயகி அம்மன் கோவிலும், கம்பர் சமாதியும் உள்ளது. இதனால் இங்கு தினசரி அதிக அளவில் மக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருவோர் மதுரை–தொண்டி ரோட்டில் உள்ள நாட்டரசன்கோட்டை விலக்கில் இறங்கிதான் செல்ல வேண்டும். இதேபோல் நாட்டரசன்கோட்டையில் வசிக்கும் பொதுமக்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் 3 கி.மீ. தொலைவில் உள்ள விலக்கு ரோட்டிற்கு வந்துதான் பஸ் ஏற வேண்டும். இதனால் விலக்கு பகுதியில் நகரத்தார் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது குடிநீர் வசதியின்றி மக்கள் தவித்து வருகின்றனர். எனவே நாட்டரசன்கோட்டை விலக்கு பகுதியில் உள்ளூர், வெளியூர் மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்