ஸ்டெர்லைட் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

ஸ்டெர்லைட் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

Update: 2018-07-23 23:30 GMT

மதுரை,

தூத்துக்குடியை சேர்ந்த பிரின்ஸ் கார்டோசா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை கடந்த 1995–ம் ஆண்டு முதல் தூத்துக்குடியில் இயங்கி வருகிறது. 2007–ம் ஆண்டு இந்த ஆலை 900 டன் முதல் 1,200 டன் வரை காப்பர் உற்பத்திக்கான லைசென்சு பெற்றது. அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு 172 எக்டர் நிலம் உள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்த தகவல் தவறானது. ஸ்டெர்லைட் ஆலைக்கு 102 எக்டர் பரப்பளவில் தான் நிலம் உள்ளது. இந்த தகவலை மத்திய–மாநில அரசுகள் முறையாக ஆய்வு செய்யவில்லை.

இதேபோல நிறுவனத்தை சுற்றி 250 மீட்டர் அளவில் பசுமை வளையத்தை அமைப்பது அவசியம். ஆனால் ஸ்டெர்லைட் ஆலை 25 மீட்டர் அளவில் மட்டுமே இதை செயல்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் போதிய அக்கறை செலுத்தவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில் கூட இந்த முறைகேடுகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகைகளை வெளியேற்ற குறிப்பிட்ட உயரத்திலான புகைபோக்கிகள் அமைக்கப்படவில்லை. ஆலையில் இருந்து மெர்குரி உள்பட கழிவுகளை வெளியேற்றவும் போதிய திட்டங்கள் வகுக்கவில்லை. நிறுவனத்தை சுற்றிலும் நிலத்தடி நீரில் குளோரைட், சல்பேட் உள்ளிட்டவைகளின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது. இந்த நிறுவனத்தை சுற்றிலும் 15 கிராமங்களின் நிலத்தடி நீரின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 15 இடங்களிலும் நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்திருப்பதாகவும், அவை குடிப்பதற்கு உகந்தது இல்லை என்பதும் தெரியவந்தது.

எனவே மத்திய–மாநில சுற்றுச்சூழல்துறை சார்பில் இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஆர்.தாரணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய சுற்றுச்சூழல்துறை செயலாளர், மத்திய சுங்கத்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்