மசினகுடி பகுதியில் இரவு நேரங்களில் விடுதிகளில் நெருப்பு மூட்டக்கூடாது, புலிகள் காப்பக அதிகாரி உத்தரவு
மசினகுடி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் இரவு நேரங்களில் நேருப்பு மூட்ட கூடாது என முதுமலை புலிகள் காப்பக அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
மசினகுடி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதி முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி உள்ளதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்காக மசினகுடி, பொக்காபுரம், மாவனல்லா, சிங்காரா ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் தங்கும் சுற்றுலா பயணிகளுக்காக தனியார் விடுதிகள் சார்பாக ஜீப் சவாரி, பான்ட் பயர் எனபடும் தீ மூட்டும் நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தபட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் தங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் செயல்பட்டு வந்த முதுமலை புலிகள் காப்பகம் தற்போது சிங்காரா, சீகூர், தென்குமராடா வனப்பகுதிகள் சேர்க்கபட்டு 690 சதுர கிலோ மீட்டராக விரிவுபடுத்தபட்டுள்ளது. இதில் சீகூர், சிங்காரா, தென்குமராடா வனபகுதிகள் புலிகள் காப்பகத்தின் வெளிமண்டலமாக அறிவிக்கபட்டுள்ளது. இந்த வனப்பகுதியில் சூழல் சுற்றுலா திட்டம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிங்காரா வனகுதியை ஒட்டியுள்ள மசினகுடி, சிங்காரா, பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளுக்காக இரவு நேரங்களில் பாண்ட் பயர் எனபடும் தீயை மூட்டி, அதனை சுற்றி சுற்றுலா பயணிகளை அமர வைத்து உற்சாகபடுத்தும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
இது குறித்து முதுமலை புலிகள் காப்பக வெளிமண்ட துணை கள இயக்குனர் புஷ்பாகரன் கூறியதாவது:–
தனியார் தங்கும் விடுதிகளில் இரவு நேரங்களில் தீயை மூட்டும் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுதி நிர்வாகம் தீயை மூட்டுகின்றனவா? என்பதை கண்காணிக்கவும் குழுக்கள் நியமிக்கபட்டுள்ளது. இந்த குழு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே தடையை மீறும் தனியார் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.