வால்பாறையில் ஆற்றின் ஓரத்தில் உள்ள கக்கன்காலனி குடியிருப்பு பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

வால்பாறையில் வாழைத்தோட்டம் ஆற்றின் ஓரத்தில் உள்ள கக்கன்காலனி பகுதியில் தடுப்புசுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-07-23 22:15 GMT

வால்பாறை,

வால்பாறை நகர் பகுதியையொட்டி கக்கன்காலனி குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சவரங்காடு எஸ்டேட் பகுதிக்கும் கக்கன்காலனி பகுதிக்கும் இடையில் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் எப்போதும் தண்ணீர் அதிகளவில் இருக்காது. ஆனால் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது மழைத்தண்ணீரோடு சேர்ந்து ஆற்றுத் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது.

தென்மேற்கு பருமழை தீவிரமாக பெய்யும் போது நள்ளிரவு நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும் ஆற்றுத் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து ஆபத்தான சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் ஓவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை காலங்களில் ஏற்படும் ஆபத்தான சூழ்நிலையை தடுப்பதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும் என்று கக்கன்காலனி பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் இதுவரை அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரிவாசு கக்கன்காலனி பகுதியில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு ஆற்றுத்தண்ணீர் வீடுகளுக்குள் புகுவதை தடுக்க தடுப்பு சுவர் கட்டித்தருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத போல ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை காலத்தில் வாழைத்தோட்டம் ஆற்றுத்தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள்ளும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக டெப்போவிற்குள்ளும் புகுந்து ஆபத்தான சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே வாழைத்தோட்டம் ஆற்றை தூர்வாரி சுத்தம் செய்வதற்கும், ஆற்றின் கரை பகுதியில் உயரமான அளவில் தடுப்பு சுவர் கட்டித்தருவதற்கும், அரசு பஸ்டெப்போவிற்குள் தண்ணீர் பகுவதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்