கூச்சலிட்டபடி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை தட்டிக்கேட்ட போலீஸ்காரரை சாவியால் குத்திய 2 பேர் கைது

கூச்சலிட்டபடி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை தட்டிக்கேட்ட போலீஸ்காரரை சாவியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-07-23 23:15 GMT

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக சிறுலாப்பட்டு கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 31) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் அரசூர் கூட்டுசாலையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் இரவு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு 1 மணியளவில் அந்த புறக்காவல் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்றின் ஓரமாக போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.

இதையடுத்து போலீஸ்காரர் செந்தில்குமார் ஒரு மோட்டார் சைக்கிளில் பேரங்கியூருக்கு சென்றார். அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கிருந்து மீண்டும் அரசூருக்கு புறப்பட்டார்.

இருவேல்பட்டு பெட்ரோல் நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தபோது இவருக்கு பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் அதிவேகமாக கூச்சலிட்டபடி வந்தனர். இதை பார்த்த போலீஸ்காரர் செந்தில்குமார், உடனடியாக அவர்கள் 3 பேரையும் வழிமறித்து எதற்காக இவ்வளவு வேகமாக வருகிறீர்கள் என்று கேட்டார்.

மேலும் அவர்கள் கையில் வைத்திருந்த லாரி பேட்டரிகளை பார்த்த போலீஸ்காரர் செந்தில்குமார், இந்த பேட்டரிகளை எங்கிருந்து எடுத்து வருகிறீர்கள், ஏதேனும் லாரிகளில் இருந்து திருடிக்கொண்டு வருகிறீர்களா? என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். உடனே அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்தார். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி திடீரென போலீஸ்காரரை சரமாரியாக கையால் தாக்கினர். தொடர்ந்து, மோட்டார் சைக்கிளின் சாவியை எடுத்து போலீஸ்காரர் செந்தில்குமாரின் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து 3 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர்.

இதனிடையே கழுத்தில் ரத்தம் சொட்ட, சொட்ட அவர் மயங்கி விழுந்தார். இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், போலீஸ்காரரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பேரங்கியூரை சேர்ந்த ஏழுமலை மகன் ராமச்சந்திரன் (30), வேணுகோபால் மகன் பாலகிருஷ்ணன் (28), வைத்தியலிங்கம் மகன் ஜெயப்பிரகாஷ் (36) ஆகிய 3 பேரும் சேர்ந்து போலீஸ்காரர் செந்தில்குமாரை தாக்கிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து பேரங்கியூருக்கு விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற பாலகிருஷ்ணன், ஜெயப்பிரகாஷ் ஆகிய 2 பேரையும் மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து, அவர்கள் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் தப்பிச்சென்ற ராமச்சந்திரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்