புதுக்கோட்டையில் லாரி உரிமையாளர்கள் ஒற்றுமை சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

லாரிகளை சிறைபிடித்த 5 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை லாரி மார்க்கெட் பகுதியில் லாரி உரிமையாளர்கள் ஒற்றுமை சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது போலீசாருடன் தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-23 22:45 GMT
புதுக்கோட்டை,

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றத்தை கண்டித்தும், 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்பபெற கோரியும் மற்றும் சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். நாள்பட்ட சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். பெட்ரோல், டீசலுக்கு தமிழக அரசால் விதிக்கப்படும் வாட் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 20-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கி 4-வது நாளாக நடந்து வருகிறது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுமார் ஆயிரத்து 700 லாரிகள் கலந்து கொண்டு உள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்குகளை ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போஸ், சரவணன், செபஸ்தியான், வெள்ளைச்சாமி, சேகர் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதை கண்டித்து நேற்று புதுக்கோட்டை லாரி மார்க்கெட் பகுதியில் புதுக்கோட்டை மாவட்ட லாரி உரிமையாளர்கள் ஒற்றுமை சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பொருளாளர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டித்தும், கைது செய்யப்பட்ட 5 பேரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். இதில் இணை செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து லாரி மார்க்கெட் வளாகத்தில் புதுக்கோட்டை மாவட்ட லாரி உரிமையாளர்கள் ஒற்றுமை சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதற்காக கொட்டகை போடும் பணி நடைபெற்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன், கருணாகரன் ஆகியோர் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசாருக்கும், சங்கத்தினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனால் சங்கத்தினர் கொட்டகை போடும் பணியை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் நேற்று லாரி மார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்