காவிரியில் மூழ்கி 4 பேர் சாவு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவனின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்

மேட்டூர் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி இறந்த நிலையில், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவனின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவனை தேடும் பணி நேற்று இரண்டாவது நாளாக நடந்தது.;

Update: 2018-07-23 22:45 GMT
மேட்டூர்,

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது 35), விசைத்தறிக்கூட உரிமையாளரான இவர், தனது குடும்பத்துடன் சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த ரெட்டியூர் பகுதியில் வசிக்கும் தனது அண்ணன் கோபாலின் வீட்டுக்கு விடுமுறைக்கு வந்தார்.

சரவணன், தனது மனைவி மைதிலி (32), மகன் ஹரிஹரன்(9), மைதிலியின் சகோதரி மகள் நவீனா(15), கோபாலின் மகள்களான என்ஜினீயரிங் மாணவிகள் வாணி ஸ்ரீ(19), தனுஸ்ரீ(18) ஆகியோருடன் அருகில் நங்கவள்ளி, மேச்சேரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கப்படும் காவிரி ஆற்று பகுதிக்கு நேற்று முன்தினம் குளிக்க காரில் வந்தனர். அங்கு எதிர்பாராதவிதமாக அவர்கள் அனைவரும் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இவர்களில் மாணவி தனுஸ்ரீயை மட்டும் அந்த பகுதியில் வேலை பார்த்தவர்கள் மீட்டனர். அங்கு விரைந்து வந்த கருமலைக்கூடல் போலீசார் மற்றும் மேட்டூர் தீயணைப்பு படையினர் சரவணன், அவருடைய மனைவி மைதிலி, சகோதரியின் மகள் நவீனா, மாணவி வாணிஸ்ரீ ஆகிய 4 பேரின் உடல்களை ஆற்றில் பரிசலில் சென்று தேடி மீட்டு வந்தனர்.

சிறுவன் ஹரிஹரன் மட்டும் கிடைக்கவில்லை. அவனை தேடும் பணி நேற்று முன்தினம் இரவு 7 மணி வரை மின்னொளி வெளிச்சத்தில் நடந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அந்த பணி அதன்பிறகு நிறுத்தப்பட்டது.

இதனிடையே ஆற்றில் மூழ்கிய சிறுவன் ஹரிஹரனை தேடும் பணியில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் நேற்று இரண்டாவது நாளாக ஈடுபட்டனர். பரிசலில் சென்று அவர்கள் தீவிரமாக தேடிய நிலையில், ஆற்றில் கூடுதல் நீர்வரத்தால் சிறுவனின் கதி என்ன? என்று தெரியவில்லை.

காவிரி ஆற்றில் அதிகரித்துள்ள நீர்வரத்தால் இந்த பணியை தீயணைப்பு படையினர், போலீசார் முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. இதனிடையே செக்கானூர் கதவணை மின்நிலையத்தில் சிறுவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இருப்பினும் அந்த சிறுவன் ஹரிஹரன் கிடைக்கவில்லை என்பதால் அவன் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும் செய்திகள்