காவிரி ஆற்றில் விசைத்தறி தொழிலாளி அடித்து செல்லப்பட்டார் தேடும் பணி தீவிரம்

பள்ளிபாளையத்தில் குளித்த போது விசைத்தறி தொழிலாளி காவிரி ஆற்றின் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Update: 2018-07-23 22:45 GMT
பள்ளிபாளையம்,

மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் அதன் அருகே நின்று செல்பி எடுக்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மேட்டூர் காவிரி ஆற்றில் குளித்த ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தை சேர்ந்த சரவணனின் குடும்பத்தினர் 4 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குளித்த விசைத்தறி தொழிலாளி ஒருவர் நேற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு:-

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவிரி ரெயில்நிலைய பகுதியை சேர்ந்தவர் காத்தவராயன்(வயது 50). விசைத்தறி தொழிலாளி. இவர் நேற்று மதியம் பள்ளிபாளையத்தில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் அதில் அவர் அடித்து செல்லப்பட்டார்.

கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் ஆற்றின் மறுபுறம் நின்று குளித்து கொண்டு இருந்த பொதுமக்கள் அபாய குரல் எழுப்பினார்கள். இது குறித்து திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ஆற்றில் கயிறு கட்டி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காத்தவராயனை தேடும் பணி தீவிரமாக நடந்தது.

இது பற்றி தகவல் அறிந்ததும் திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன், குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியை பார்வையிட்டனர். ஆனால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததாலும், இருட்ட தொடங்கியதாலும் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியை நிறுத்தினர். காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட காத்தவராயனின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி இன்று(செவ்வாய்க்கிழமை) மீண்டும் நடைபெறும் என்று தெரிகிறது. காவிரி கரையோர பகுதிகளிலும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட காத்தவராயனுக்கு சியாமளா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். 

மேலும் செய்திகள்