சொந்த வீடு இல்லாதவர்கள் வீடு வழங்கும் புதிய திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

சொந்த வீடு இல்லாதவர்கள் வீடு வழங்கும் புதிய திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-23 23:15 GMT
நெல்லை,

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசின் புதிய திட்டத்தில் (பிரதம மந்திரி ஆவோஸ் யோசனா) கிராமப்புறங்களில் வீடு இல்லாமல் இருப்பவர்களுக்கும், வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கும், குடிசை வீடுகளில் இருப்பவர்களுக்கும் புதிய வீடுகள் கட்டித் தரப்பட உள்ளது.கடந்த 2013-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுக்கும் போது பதிவு செய்தவர்கள் மட்டும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். அதற்கான ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டும்.

நெல்லை மாவட்டத்தில் 425 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளது. இந்த திட்டத்தில் மனுக்கள் பெறுவதற்காக அந்த பஞ்சாயத்து அலுவலகங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு சென்று விண்ணப்பங்களை கொடுக்க வேண்டும். வருகிற 31-ந் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் வழங்கப்படும்.

முதற்கட்டமாக 1,657 வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக் கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் கிராம மக்கள் விண்ணப்பம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்