குற்றாலம் சாரல் விழா 28-ந் தேதி தொடங்குகிறது - கலெக்டர் ஷில்பா தகவல்

குற்றாலம் சாரல் விழா வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.

Update: 2018-07-23 23:00 GMT
நெல்லை,

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு சீசன் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் 2018 சாரல் விழா நடத்துதல் குறித்த முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, போக்குவரத்தினை ஒழுங்கு செய்து, அருவிகளில் பொதுமக்களின் கூட்டத்தினை கட்டுப்படுத்தி, சமூக விரோத செயல் நடைபெறாதவாறு காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் நன்றாக செயல்படுகிறதா? என்பதை கண்காணித்திட வேண்டும்.

பெண்கள் உடை மாற்றும் அறை பகுதிகளில் கூடுதலாக பெண் போலீசாரை நியமித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்திட வேண்டும். தீயணைப்பு துறையினர் தீத்தடுப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். விபத்து மீட்பு பணிகளுக்கு 108 அவசர கால ஊர்தி தயார் நிலையில் வைத்திட வேண்டும். சிறப்பு மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அரசு போக்குவரத்து கழகத்தினர் பொதுமக்களின் வருகைக்கு ஏற்ப சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். அருவி பகுதிகளில் கூடுதல் மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அருவிகளில் குளிக்கும் போது சோப்பு, ஷாம்பு, எண்ணெய் உபயோகிக்கக் கூடாது என்ற வாசகத்தினை அனைத்து அருவி பகுதிகளிலும் விளம்பர பலகைகளை வைத்திட வேண்டும்.

குற்றாலத்திற்கு வருகின்ற பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் சாரல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சாரல் விழா வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 4-ந் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், உதவி கலெக்டர்கள் மைதிலி (நெல்லை), சவுந்தரராஜ் (தென்காசி), சுற்றுலா அலுவலர் நெல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்