நீர்வரத்து அதிகரிப்பால் 37 நாட்களில் 80 அடி உயர்ந்த மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் 37 நாட்களில் நீர்மட்டம் 80 அடி உயர்ந்து முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பி உள்ளது.

Update: 2018-07-23 23:00 GMT
மேட்டூர்,

மேட்டூர் அணையின் மொத்த உயரம் 124 அடி ஆகும். இதில் அணையின் பாதுகாப்பு கருதி 120 அடி என்ற அளவில் தான் இதுவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. இதுவே அணையின் முழு கொள்ளளவாக உள்ளது.

கடந்த மாதம் தொடக்கத்தில் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்த அதே நேரத்தில் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக கடந்த மாதம் 17-ந் தேதி அணைக்கு நீர்வரத்து ஏற்பட தொடங்கிய போது அணை நீர்மட்டம் 40 அடியாக இருந்தது.

அதன்பிறகு பருவமழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு அதிகரிப்பால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக 37 நாட்களில் அணை நீர்மட்டம் 80 அடி உயர்ந்து முழு கொள்ளளவான 120 அடியை நேற்று எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது அணை வரலாற்றில் 39-வது ஆண்டாகும்.

முன்னதாக அணை இதுவரை நிரம்பிய ஆண்டுகள் விவரம் பின்வருமாறு:- கடந்த 1936, 1939, 1940, 1941, 1942, 1943, 1946, 1947, 1948, 1950, 1953, 1954, 1956-ம் ஆண்டு முதல் 1959-ம் ஆண்டு வரை, 1961, 1962, 1964, 1966, 1972, 1975, 1977 -ம் ஆண்டு முதல் 1981-ம் ஆண்டு வரை, 1991, 1992, 1994, 1997, 1999, 2000, 2005, 2006, 2007, 2010, 2013 ஆகிய ஆண்டுகளில் அணை 120 அடியை எட்டி நிரம்பி உள்ளது.

இருப்பினும் ஒரு சில ஆண்டுகளில் அணை நீர்மட்டம் 120 அடிக்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 1943, 1946, 1947, 1948 ஆகிய ஆண்டுகளில் 123 அடி வரை நீர்மட்டம் உயர்ந்திருந்தது. 1961-ம் ஆண்டு 124.85 அடியாகவும், 2005-ம் ஆண்டு 121.5 அடியாகவும், கடைசியாக 2013-ம் ஆண்டு அணை நீர்மட்டம் 121.20 அடியாகவும் உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு இதுவரை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகபட்சமாக வினாடிக்கு 1 லட்சத்து 7 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதற்கு முன்பாக கடந்த 1961-ம் ஆண்டு வினாடிக்கு 3,01,052 கனஅடியாகவும், 2005-ம் ஆண்டு வினாடிக்கு 2,41,300 கனஅடியாகவும், 2013-ம் ஆண்டு- வினாடிக்கு 1,63,072 கனஅடியாகவும் நீர்வரத்து இருந்தது.

மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை நேற்று எட்டியது. அணை முழு கொள்ளளவை எட்டுவதற்கு முன்பாகவே நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த காலங்களில் மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்ட ஆண்டுகள் மற்றும் தண்ணீர் வெளியேற்றப்பட்ட அளவுகள் விவரம் வருமாறு:-

1961-ம் ஆண்டு வினாடிக்கு 2,84,606 கனஅடியும், 2005-ம் ஆண்டு 2,31,802 கனஅடியும், 2013-ம் ஆண்டு 1,22,617 கனஅடியும் உபரிநீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்