பழங்குடியினர் சான்றிதழ் வழங்கக்கோரி இருளர் இன பெண்கள் மனு கலெக்டரிடம் வழங்கினர்

பழங்குடியினருக்கான சான்றிதழ் வழங்கக்கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருளர் இன பெண்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2018-07-23 22:45 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வீட்டுமனை பட்டா, திருமண உதவி திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 377 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

குணமங்கலம் கிராம இருளர் இனத்தை சேர்ந்த பெண்கள் வந்து மனு கொடுத்தனர். அதில், இந்த கிராமத்தில் எங்கள் சமுதாயத்தை சேர்ந்த 50 குடும்பங்கள் வசிக்கின்றனர். எங்களது பிள்ளைகள் அனைவரும் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். படித்து முடித்தபிறகு அவர்களுக்கு அளிக்கும் மாற்றுச்சான்றிதழில் கூட பழங்குடியினர் பிரிவு என குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் சான்றிதழ் தர மறுத்து அலைக்கழித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

பூண்டி அருகே உள்ள கோரிக்குடி கிராம மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் கோக்குடி கிராமத்திலுள்ள பெரிய ஏரி மூலம் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரி மற்றும் வரத்து வாய்க்கால்கள் தூர்வார படாததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாசன வசதி பெற்று வந்த நிலங்களில் தற்போது மானாவாரி பயிர்களான முத்துச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரூ.10 லட்சம் வரி வசூல் செய்து, ஏரி மற்றும் அதற்கு தண்ணீர் வரக்கூடிய வரத்து வாய்க்கால் முறையாக சர்வே செய்து தூர்வாரப்பட்டு வருகிறது. ஆனால் ஏரிக்கு தண்ணீர் வரக்கூடிய வாய்க்காலில் அரசால் தடுப்பணை கட்டுவதாக தெரிகிறது. இதனால் ஏரிக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் போய்விடும். விவசாயம் முழுமையாக பாதிக்கப்படும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி விடும். எனவே ஏரி நிரம்பி உபரி நீர் செல்லும் வழியில் தடுப்பணை கட்டினால் நலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பூங்கோதை, துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்