ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அம்மையார்குப்பம் ஊராட்சியில் உள்ள ஜி.எஸ்.டி. நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள 3-வது தெருவில் சிலர் தெருவை ஆக்கிரமித்து கல்தூண்கள் நட்டு உள்ளனர்.
இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தெருவில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த தெருவில் கழிவுநீர் கால்வாய் வசதியும் இல்லை.
இது குறித்து முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள், ஆக்கி ரமிப்புகளை அகற்றக் கோரி ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் அவர்களின் கோரிக்கைகளை கேட்டனர். இதையடுத்து பொதுமக்கள், தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி அதிகாரிகளிடம் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகையை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.