விவசாயிகள் பயன்படுத்தும் சாலையை அமைக்கவிடாமல் தடுப்பதாக வனத்துறை மீது புகார்

விவசாயிகள் பயன்படுத்தும் சாலையை அமைக்கவிடாமல் தடுப்பதாக வனத்துறை மீது புகார் கூறி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2018-07-23 22:45 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதேபோல் திங்கட்கிழமையான நேற்றும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள லூயி பிரெயிலி கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும்  முகாம் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.

அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

 பூதப்பாண்டி பேரூராட்சி மண்டல தலைவர் விஜய்மணிகண்டன் தலைமையில், பா.ஜனதா நிர்வாகிகள் கிருஷ்ணன், சொக்கலிங்கம், ஜெயராம், விசுவ இந்து பரி‌ஷத் திருக்கோவில்கள்– திருமடங்கள் மாநில அமைப்பாளர் காளியப்பன் மற்றும் ஞாலம் பஞ்சாயத்து, பூதப்பாண்டி ஜீவாநகர், சாட்டுபுதூர் கிராமம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இணைந்து தனித்தனியாக கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

 அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

தோவாளை தாலுகா ஞாலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிறமடம் கிராமத்தை சேர்ந்த 50 பேர் வேலிமலை எஸ்டேட்டில் விவசாயம் செய்து வருகிறார்கள். அங்கு வாழை, மரச்சீனி பயிரிட்டுள்ளார்கள். எஸ்டேட்டுக்கு செல்ல விவசாயிகள் பயன்படுத்தும் இந்த சாலையை இதுவரை ஞாலம் பஞ்சாயத்தில் இருந்து அமைத்து தந்துள்ளார்கள். தற்போது இந்த பாதை வனத்துறைக்கு சொந்தமானது என்று கூறி வனத்துறையினர் சாலை அமைப்பதை தடுக்கிறார்கள். அதனால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஜீவாநகர் மற்றும் சாட்டுபுதூர் பகுதிகளில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள சாலை மிகவும் பழுதடைந்து, குண்டும்– குழியுமாக இருப்பதால் எந்த வாகனமும் செல்ல முடியாத அளவுக்கு சிதிலமடைந்து கிடக்கிறது. இந்த சாலையை செப்பனிட்டு சுமார் 15 ஆண்டுகள் ஆகிறது. பூதப்பாண்டி பேரூராட்சியில் பலமுறை முறையிட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால் தாங்கள் இந்த சாலையை செப்பனிட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் ஞாலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கண்டன்குழி ஊரில் இருந்து சங்கரலிங்கம் கிராமத்துக்கு செல்லும் பாதை பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்துவருகிறது. இதனை அடைக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.

நாகர்கோவில் இடலாக்குடி சி.எஸ்.ஐ. திருச்சபை மக்கள் சார்பில் கொடுத்த மனுவில் ஆலயப்பணிகள் தொடர்ந்து தடையின்றி நடைபெற ஆணை வழங்கக்கோரியிருந்தனர்.

மேலும் செய்திகள்