ஆட்டோ மீது அரசு பஸ் மோதல்; பேரூராட்சி ஊழியர் உள்பட 2 பேர் பலி

முளகுமூடு அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பேரூராட்சி ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-07-23 23:00 GMT
பத்மநாபபுரம்,

குமரி மாவட்டம் கருங்கல் அருகே கிள்ளியூர், சடையன்குழி பகுதியை சேர்ந்தவர் ஐசக் ஜெபஸ்டின் (வயது 48). இவர் கிள்ளியூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஏஞ்சல் (45). இவர் கோதநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

அதே ஆரம்ப சுகாதார நிலையத்தில் காப்புக்காடு, காணாவிளையை சேர்ந்த ராஜாராம் மனைவி ஷீலா (45) நர்சாக பணியாற்றினார். ஒரே இடத்தில் பணிபுரிந்ததால் ஏஞ்சலும், ஷீலாவும் தோழிகள் ஆனார்கள்.


ஐசக் ஜெபஸ்டின் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதனால், கடந்த 2 வாரமாக அலுவலகத்துக்கு செல்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று தக்கலை அருகே மணலியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மருந்து வாங்க ஐசக் ஜெபஸ்டினும், அவரது மனைவி ஏஞ்சலும் ஆட்டோவில் புறப்பட்டனர்.

 அவர்களுடன் ஏஞ்சலின் தோழி ஷீலாவும் உடன் சென்றார். ஆட்டோவை பருத்திவிளையை சேர்ந்த மோசஸ் (50) ஓட்டி சென்றார்.


இவர்கள் முளகுமூடு அருகே கல்லுவிளை சந்திப்பில் சாலையை கடக்க முயன்ற போது, எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பஸ் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் நொறுங்கியது. அதில் இருந்த ஐசக் ஜெபஸ்டின், அவரது மனைவி ஏஞ்சல், ஷீலா, ஆட்டோ டிரைவர் மோசஸ் ஆகிய 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி ரத்த வெள்ளத்தில் அலறினர். விபத்து நடந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கூடினர். அவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனால், ஆஸ்பத்திரியில் சேர்ந்த சில நிமிடங்களில் ஐசக் ஜெபஸ்டின் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து, ஷீலாவும், ஆட்டோ டிரைவர் மோசசும் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் ஷீலா பரிதாபமாக இறந்தார். மோசசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், படுகாயம் அடைந்த ஏஞ்சல் சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் சிக்கிய அரசு பஸ் மற்றும் ஆட்டோவை கைப்பற்றி தக்கலை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக அரசு பஸ் டிரைவர் மேக்கோட்டை சேர்ந்த ஜெனிபர் (32) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த ஐசக் ஜெபஸ்டினுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நெய்யூரில் ஒரு தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இரண்டாவது மகள் பிளஸ்–2 படித்து வருகிறார். விபத்தில் பலியான நர்சு லீலாவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் கல்லூரியிலும், மகள் பள்ளியிலும் படித்து வருகிறார்கள்.

இந்த விபத்து காரணமாக நேற்று நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்