நம்மை காப்பாற்றும் மரங்களை வளர்ப்போம் நடிகர் விவேக் பேச்சு
பிராண வாயு தந்து வாழ்நாள் முழுவதும் நம்மை காப்பாற்றும் மரங்களை வளர்ப்போம் என்று நடிகர் விவேக் பேசினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை நகரில் தூய்மை அருணை என்ற திட்டத்தின் மூலம் தூய்மைப்படுத்துதல், மரம் நடுதல் மற்றும் மருத்துவ முகாம் போன்ற பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை நகரில் உள்ள 39 வார்டுகளிலும் 1 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தூய்மை அருணை திட்டத்தின் அமைப்பாளரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுச் சூழல் ஆர்வலரும், நடிகருமான விவேக் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவில் உள்ள மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஒரே சூப்பர் ஸ்டார், ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தான். இன்று அவர் நம்மோடு இல்லை என்றாலும், நம் உள்ளங்களில் வாழ்கிறார். அவர் ஒரு கோட்டு, சூட்டு போட்ட சித்தர். நான் அவரை பேட்டி எடுக்க செல்லும் போது, அவர் என்னிடம் நாட்டில் 1 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து நான் மரக்கன்றுகளை நட்டு வருகிறேன். இந்த 1 லட்சம் மரக்கன்றுகளையும் எனது கணக்கில் சேர்த்து கொண்டால், தற்போது வரை 30 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உள்ளேன்.
மனிதனுக்கு தேவையான பிராணவாயு தருபவை மரங்கள். அவைகள் தான் கார்பன் டை ஆக்சைடில் இருந்து ஆக்சிஜனை பிரித்து நமக்கு தருகிறது. ஒரு தாய் நம்மை 10 மாதம் தான் வயிற்றில் வைத்து காப்பாற்றுகிறார். ஆனால் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவது மரங்கள் தான். ஆக மரங்கள் தாயைவிட உயர்ந்தவை. ஒரு மனிதனை 60-வது வயது வரை செயற்கையாக சுவாசிக்க வைத்து வாழ வைத்தோம் என்றால், அந்த மனிதனுக்கு ஆகிற செலவு சுமார் ரூ.5 கோடி ஆகும். அதனால் ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் பார்க்காமல் நம்மை உலகில் நடமாட வைக்கும் மரங்களை நாம் வளர்ப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து திருவண்ணாமலை நகரில் நகராட்சி அலுவலகம் எதிரிலும், போளூர் ரோடு பகுதியிலும், பச்சையம்மன் கோவில் பகுதிகளிலும் நடிகர் விவேக், எ.வ.வேலு எம்.எல்.ஏ. இணைந்து மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
விழாவில் ஒருங்கிணைப்பாளர்களான சாவல்பூண்டி மா.சுந்தரேசன், இரா.ஸ்ரீதரன், மு.பெ.கிரி எம்.எல்.ஏ., ப.கார்த்திவேல்மாறன், எஸ்.பன்னீர்செல்வம், கு.கருணாநிதி, சி.என்.அண்ணாதுரை, மருத்துவர் எ.வ.வே.கம்பன் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், கட்சியினர், கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், தன்னார்வலர்கள், தொழில் அதிபர்கள் என பலர் கலந்துகொண்டனர்.