பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் பாலகிருஷ்ணன் பேட்டி
ஆகஸ்டு 15–ந் தேதி மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட இருப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
தூத்துக்குடி,
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ஆகஸ்டு 15–ந் தேதி மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட இருப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழுவின் விசாரணை அறிக்கையை பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை தூத்துக்குடியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:–
போலீசார் அத்துமீறல்தூத்துக்குடியில் 2 மாதங்களுக்கு மேலாக போலீசார் எந்தவித விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் தொடர்ந்து அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள். கடந்த மே மாதம் 22–ந் தேதி ஒரு மோசமான அடக்கு முறை நடந்தது. அதன் பிறகு இன்று வரை தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சுமூகமான நிலையை ஏற்படுத்தாமல் ஏராளமான போலீசை குவித்து வைத்துக் கொண்டு தொடர்ந்து அத்துமீறல்கள் நடந்து வருகிறது.
மனித சங்கிலி போராட்டம்இந்த கூட்டத்துக்கு வரும் மக்களை எல்லாம் மிரட்டி திரும்பி அனுப்பும் செயல் நடந்து உள்ளது. இதை தூத்துக்குடியோடு நிற்கும் பிரச்சினையாக பார்க்கவில்லை. இப்படிப்பட்ட அடக்குமுறையை அநியாயத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் குரல் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் இப்படிப்பட்ட செயலை அரசு செய்து வருகிறது. இந்த அடக்குமுறையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்ற கட்சிகளுடன் இணைந்து உறுதியான போராட்டம் நடத்தும்.
தமிழக அரசில் உள்ள அமைச்சர்கள் சுய சிந்தனையோடு இல்லை. அவர்கள் எப்போது என்ன பேசுவார்கள் என்பது தெரியாது. 8 வழிச்சாலை வேண்டாம் என்று கூறும் போது, அதனை ஏன் அமைக்க வேண்டும். சிறுமிகளை பாலியல் கொடுமைகள் அதிகம் நடக்கிறது. பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அடுத்த மாதம்(ஆகஸ்ட்) 15–ந் தேதி மாநிலம் முழுவதும் மனிதசங்கிலி போராட்டம் நடத்துகிறோம். இதற்கான சமூக விழிப்புணர்வு இயக்கத்தை அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும்.
இவ்வாறு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.