கோவில்பட்டியில் கட்டிட தொழிலாளி மனைவி தற்கொலைக்கு காரணம் என்ன? போலீஸ் தீவிர விசாரணை

தன்னுடைய 2 குழந்தைகளை கட்டிப்போட்டு கொல்ல முயன்றதுடன், தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-07-22 22:20 GMT

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் கட்டிட தொழிலாளி மனைவி தன்னுடைய 2 குழந்தைகளை கட்டிப்போட்டு கொல்ல முயன்றதுடன், தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டிட தொழிலாளி

கோவில்பட்டி முத்து நகரைச் சேர்ந்தவர் காட்டுராஜா. இவருடைய மகன் முத்துகுமார் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்த பிரியங்காவை (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெய்ஸ்னவி (1½) என்ற பெண் குழந்தையும், கீச்சுதன் என்ற 8 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு முத்துகுமார் மனைவி, குழந்தைகளுடன் கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளம் சாலையம் தெரு மேல காலனியில் உள்ள வாடகை வீட்டில் குடியேறினார்.

தற்கொலை

நேற்று முன்தினம் காலையில் முத்துகுமார் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். பின்னர் அவர் மதியம் வீட்டுக்கு சென்று சாப்பிட்டு விட்டு, மீண்டும் வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்து இரவில் அவர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கப்படாததால், அவர் சந்தேகம் அடைந்தார்.

பின்னர் அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றார். அப்போது வீட்டில் பிரியங்கா தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்தார். அவரது 2 குழந்தைகளின் கைகளும் கயிற்றால் கட்டப்பட்ட நிலையிலும், அவர்களின் வாயில் துணியை திணித்து வைத்த நிலையிலும் தரையில் மயங்கி கிடந்தனர்.

குழந்தைகளுக்கு சிகிச்சை

உடனே பிரியங்கா மற்றும் அவருடைய 2 குழந்தைளையும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரியங்கா ஏற்கனவே இறந்தது உறுதி செய்யப்பட்டது. உயிருக்கு போராடிய ஜெய்ஸ்னவி, கீச்சுதன் ஆகிய 2 குழந்தைகளுக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரியங்கா உடல் பரிசோதனை சேய்யப்பட்டு உதவி கலெக்டர் விஜயா விசாரணைக்கு பின்னர் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காரணம் என்ன?

இதற்கிடையே பிரியங்கா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில்,‘ முத்துகுமார் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டியை சேர்ந்த விஷ்ணு பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். அவர்களுக்கு மகேஷ்குமார் என்ற மகன் பிறந்த சில மாதங்களிலேயே விஷ்ணுபிரியாவுடன் விவாகரத்து ஆகியுள்ளது. இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரியாவையும் முத்துக்குமார் காதலித்து திருமணம் செய்து உள்ளார்.

முத்துக்குமார் முதல் மனைவியின் மகனான மகேஷ்குமார் 2–வது மனைவி பிரியா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இது பிரியாவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தனது தந்தை காட்டுராஜா வீட்டில் மகேஷ்குமாரை கொண்டு சென்று விட்டு வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து கிழக்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்