தூத்துக்குடி மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு, கேரட் விலை உயர்வு மற்ற காய்கறிகள் தட்டுப்பாடின்றி விற்பனை

லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு, கேரட் விலை உயர்த்தி விற்கப்படுகிறது.;

Update: 2018-07-22 22:30 GMT

தூத்துக்குடி, 

லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு, கேரட் விலை உயர்த்தி விற்கப்படுகிறது. அதேசமயம், வெளியூர்களில் இருந்து மற்ற காய்கறிகள் வழக்கம் போல் வரத்து இருப்பதால், தட்டுப்பாடின்றி விற்கப்படுகின்றன.

காய்கறி மார்க்கெட்

தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஒட்டன்சத்திரம், மதுரை, பாவூர்சத்திரம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இது தவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் மார்க்கெட்டுக்கு வருகிறது. தற்போது நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆனாலும் வெளியூர்களில் இருந்து வரும் காய்கறி லாரிகள் வழக்கம் போல் கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.

விலை அதிகரிப்பு

இதனால் தூத்துக்குடி மார்க்கெட்டில் கடந்த 10 நாட்களாக காய்கறி விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளது. அதே நேரத்தில் உருளைக்கிழங்கு, கேரட் ஆகியவற்றை வியாபாரிகள் இருப்பு வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் நேற்று முன்தினம் ரூ.20–க்கு விற்பனையான உருளைக்கிழங்கு ரூ.30–க்கும், ரூ.30–க்கு விற்பனையான கேரட் ரூ.40–க்கும், ரூ.18–க்கு விற்பனையான பல்லாரி ரூ.20 ஆகவும் விலை அதிகரித்து விற்பனையானது.

மேலும், நேற்று ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.15 முதல் ரூ.20 வரையும், தக்காளி ரூ.25–க்கும், மிளகாய் ரூ.60–க்கும், அவரைக்காய் ரூ.20–க்கும், பீன்ஸ் ரூ.70–க்கும், கருணைக்கிழங்கு ரூ.50–க்கும், சேனைக்கிழங்கு ரூ.20–க்கும் விற்பனையானது.

தட்டுப்பாடு இல்லை

இது குறித்து காய்கறி வியாபாரி ஒருவர் கூறும் போது, ‘தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு ஒட்டன்சத்திரம், மதுரை, பாவூர்சத்திரத்தில் இருந்து வழக்கம் போல் அதிகாலை நேரத்திலேயே காய்கறிகள் வந்து விடுகின்றன. இதனால் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் இல்லை. இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்து தீவிரமடைந்தால் காய்கறி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது’ என்று கூறினார்.

மேலும் செய்திகள்