போலீஸ் விசாரணைக்குப்பின் உடல் நலம் பாதிப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் சாவு

போலீஸ் விசாரணைக்குப்பின் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.;

Update: 2018-07-23 00:00 GMT
மும்பை, 

போலீஸ் விசாரணைக்குப்பின் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் போலீஸ் வாகனங்கள் சூறையாடப்பட்டன. போலீசார் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

போலீஸ் விசாரணை

மும்பை தாராவி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் சச்சின் (வயது17). இவரை ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக தாராவி போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் வீடு திரும்பிய அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அவரது உடல் நிலை மோசமானதை அடுத்து, குடும்பத்தினர் சிகிச்சைக்காக சச்சினை சயான் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் தாக்கியதால் தான் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி அவரது குடும்பத்தினர், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் நேற்று முன்தினம் தாராவி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். போலீஸ் தரப்பில் அவர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வாலிபர் சாவு

இந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த சச்சின் திடீரென இரவு உயிரிழந்தார். இதை அறிந்து அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர்.

சிறிது நேரத்தில் உறவினர்கள், பொதுமக்கள் என சுமார் 100 பேர் சயான் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் மாநில பாதுகாப்பு படையினரை நோக்கி கற்களை வீசி சரமாரியாக தாக்கினார்கள்.

போலீசார் மீது தாக்குதல்

மேலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஆஸ்பத்திரிக்குள் நுழைய முயன்றனர். போலீசார், மாநில பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் மேலும் கோபம் அடைந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் போலீசாரையும், மாநில பாதுகாப்பு படையினரையும் பிடித்து சரமாரியாக தாக்கினார்கள். அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ் வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள்.

இதில் போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகள் நொறுங்கின. அங்குள்ள போக்குவரத்து போலீஸ் அலுவலகத்தையும் அந்த கும்பல் சூறையாடியது.

5 போலீசார் படுகாயம்

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது. இந்த தாக்குதலில் 2 போலீசார், 3 மாநில பாதுகாப்பு படையினர் படுகாயம் அடைந்தனர். இதில் ஒருவர் பெண் ஆவார். இவர்களில் போலீஸ்காரர் கிஷோர் குமார் கதம் (வயது21) தலையில் பலத்தம் காயம் அடைந்தார்.

அவர்கள் 5 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் காரணமாக சயான் ஆஸ்பத்திரியில் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, பாதுகாப்புக்காக அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். உயிரிழந்த வாலிபர் சச்சினின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை வாலிபரின் உடைலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்