பண்டர்பூரில் இன்று ஆஷாடி ஏகாதசி திருவிழா 10 லட்சம் பக்தர்கள் குவிகிறார்கள் முதல்-மந்திரி பட்னாவிஸ் பயணம் திடீர் ரத்து

பண்டர்பூரில் இன்று நடக்கும் ஆஷாடி ஏகாதசி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக திட்டமிட்டு இருந்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் பயணம் மராத்தா சமுதாயத்தினரின் போராட்ட அறிவிப்பால் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-07-22 23:30 GMT
மும்பை, 

பண்டர்பூரில் இன்று நடக்கும் ஆஷாடி ஏகாதசி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக திட்டமிட்டு இருந்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் பயணம் மராத்தா சமுதாயத்தினரின் போராட்ட அறிவிப்பால் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

சோலாப்பூர் மாவட்டம் பண்டர்பூரில் பிரசித்தி பெற்ற விட்டல் சாமி கோவில் உள்ளது.

ஆஷாடி ஏகாதசி

இந்த கோவிலில் கிருஷ்ணர், ருக்மிணி தேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் ஆஷாடி ஏகாதசி திருவிழா இந்த கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த திருவிழாவில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு ஆஷாடி ஏகாதசி திருவிழா விட்டல் சாமி கோவிலில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

பக்தர்கள் குவிந்தனர்

இதையொட்டி மராட்டியம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பண்டர்பூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். பாதயாத்திரையாக வந்த ஏராளமான பக்தர்கள், கிருஷ்ணரின் பெருமைகளை போற்றும் பஜனை பாடல்களை இசைத்தபடி சென்றனர். ஆஷாடி ஏகாதசியையொட்டி பண்டர்பூருக்கு மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பண்டர்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் இன்னிசை வாத்தியங்கள் முழங்க பஜனை பாடல்களை பாடினர். பெரும்பாலான பக்தர்கள் நேற்றே குவிந்து விட்டனர். அவர்கள் அங்குள்ள சந்திரபாகா நதியில் புனித நீராடினார்கள்.

போராட்ட அறிவிப்பு

ஆஷாடி ஏகாதசி திருவிழாவில் மாநில முதல்-மந்திரியாக இருப்பவர் இந்த கோவிலுக்கு சென்று பூஜையில் கலந்து கொள்வது சம்பிரதாயமாக இருந்து வருகிறது. அதன்படி இன்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பண்டர்பூர் சென்று சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டு இருந்தார்.

இந்த நிலையில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கேட்டு போராடி வரும் மராத்தா சமூகத்தை சேர்ந்தவர்கள், பண்டர்பூர் விட்டல் சாமி கோவிலுக்கு வரும் முதல்-மந்திரிக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்து உள்ளனர்.

மாநிலம் முழுவதும் பல கட்டமாக அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தை நடத்தியபோதிலும், தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாததால் பண்டர்பூர் விட்டல்சாமி கோவிலுக்கு வரும் முதல்-மந்திரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். 10 லட்சம் பக்தர்கள் திரளும் இடத்தில் மராத்தா சமுதாயத்தினரின் போராட்ட அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பயணம் ரத்து

இந்தநிலையில் இன்று பண்டர்பூர் விட்டல்சாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய இருந்த நிகழ்ச்சியை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் திடீரென ரத்து செய்தார்.

மராத்தா சமுதாயத்தினரின் எதிர்ப்பை தொடர்ந்து பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனது பயணத்தை ரத்து செய்ததாக அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் விமர்சனம்

இதற்கிடையே முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பண்டர்பூர் விட்டல்சாமி கோவில் பயணத்தை ரத்து செய்தது ஏன்? என்று மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கேள்வி எழுப்பி உள்ளார்.

பொய்வாக்குறுதிகள் மற்றும் மோசடிகளால் மக்கள் சோர்ந்து போய் விட்டனர் என்றும், மாநில மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால், விட்டல் சாமி முதல்-மந்திரிக்கு தரிசனம் வழங்கி இருப்பார் என்றும் அவர் விமர்சித்து உள்ளார்.

எதற்கெடுத்தாலும் பா.ஜனதாவை விமர்சித்து வரும் ஆளும் கூட்டணி கட்சியான சிவசேனா, இந்த பிரச்சினையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் பக்கம் நின்றுள்ளது. இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி பொறுப்புடன் நடந்து கொண்டுள்ளார் என்று அக்கட்சியை சேர்ந்த நீலம் கோரே எம்.எல்.சி. தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்