மில் தொழிலாளர்களுக்கான பணிக்கொடையை வழங்க வேண்டும், பஞ்சாலை தொழிலாளர் சங்கம் கோரிக்கை

மில் தொழிலாளர்களுக்கான பணிக்கொடையை வழங்கவேண்டும் என்று பஞ்சாலை தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2018-07-22 22:30 GMT

புதுச்சேரி,

புதுவை பஞ்சாலை தொழிலாளர் சங்க (ஏ.ஐ.டி.யு.சி.) பேரவை கூட்டம் ஏ.ஐ.டி.யு.சி. தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தொழிலாளர் சங்க தலைவர் ரவி தலைமை தாங்கினார். செயாளர் அபிசேகம் நடந்த வேலைகள் குறித்து பேசினார். கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் தினேஷ் பொன்னையா, செயலாளர் சேதுசெல்வம், சங்க பொருளாளர் தேசிகன், துணைத்தலைவர்கள் பூபதி, கேசவன், ஏழுமலை, பார்த்திபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

*ரோடியர், பாரதி, சுதேசி மில்களை புனரமைப்பு செய்திட ரூ.500 கோடியை மானியமாக மத்திய அரசு வழங்கிட வேண்டும்.

*தமிழக பகுதிகளான கோவை, ஈரோடு முதலிய இடங்களில் இருந்த சாயப்பட்டறைகள் அனைத்தும் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியத்தால் மூடப்பட்டுவிட்டன. அதனால் அங்கு உற்பத்தியாகும் துணிகள் ஆந்திர மாநிலத்துக்கு கொண்டு சலவை செய்யப்படுகிறது. எனவே இவ்வேளையில் ரோடியர், பாரதி, சுதேசி மில்களில் உள்ள டை–அவுஸ் பகுதிகளை நவீனமயமாக அமைத்தால் அதன் மூலம் வேலைவாய்ப்பினையும், லாபகரமான வருவாயையும் ஈட்டலாம்.

*3 மில்களையும் இணைந்து ஜவுளிப்பூங்கா அமைக்கவேண்டும். அதன் மூலம் பின்னலாடை, தையல், கார்மெண்ட் ஆடைகள் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் 10 ஆயிரம் பெண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்திட முடியும்.

*அரசுத்துறை, அரசுசார்பு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடைகள், பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சீருடைகள், ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச துணி வகைகள் அனைத்தும் இந்த மில்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.

*ரோடியர் மில்லில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் நிர்வாக இயக்குனர் சோமசுந்தரம் மில்லை லாபகரமாக நடத்திட அளித்த ஆலோசனை கடிதத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

*3 மில்களிலும் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய பணிக்கொடை மற்றும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள அனைத்து பாக்கித்தொகைகளையும் இனியும் காலங்கடத்தாமல் உடனடியாக வழங்கிட வேண்டும்.

*ரோடியர், பாரதி, சுதேசி மில்களில் பணிபுரியும் தற்காலிக பயிற்சியாளர்கள் என்ற பெயர்களில் வேலை வாங்கப்பட்டு வரும் தொழிலாளர்களில் தொடர்ந்து 2 ஆண்டுகளில் 480 நாட்கள் பணி முடித்தவர்களை நிரந்தரம் செய்யவேண்டும். அதுவரையில் அவர்களுக்கு நாள் கூலியாக ரூ.600 வழங்கவேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்