ஈரோடு மாவட்டத்தில் 3–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம்: ரூ.150 கோடி வர்த்தகம் பாதிப்பு

3–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடப்பதால் ஈரோடு மாவட்டத்தில் ரூ.150 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-07-22 22:30 GMT

ஈரோடு,

டீசல் விலை உயர்வு, 3–ம் நபர் காப்பீடு உயர்வு, சுங்க சாவடி கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், நீண்ட நாட்களாக இயங்கும் சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும். தமிழக அரசு டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் கடந்த 20–ந் தேதி தொடங்கியது.

அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. சுமார் 5 ஆயிரம் லாரிகள் இயக்கப்படவில்லை. ஈரோடு நரிப்பள்ளம் பகுதியில் நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அங்கு டிரைவர்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை சமைத்து சாப்பிட்டு, அங்கேயே ஓய்வெடுத்து வருகின்றனர்.

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஈரோட்டில் இருந்து வெளியூருக்கு செல்லும் சரக்குகள் தேங்கி கிடக்கின்றன. குறிப்பாக மஞ்சள், எண்ணெய் வகைகள், ஜவுளி, உரம் உள்பட பல்வேறு பொருட்கள் பார்சல் அலுவலகங்களில் தேங்கி கிடக்கின்றன. சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்து உள்ளது. தொடர்ந்து 3 நாட்களாக போராட்டம் நடப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.

ஈரோட்டிற்கு ஊட்டி, தர்மபுரி, சேலம், நீலகிரி, கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் லாரிகள் மூலமாக தினமும் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் போராட்டம் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் விலை உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்