பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 3 பேர் சாவு
பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு விபத்தில் வாலிபர் பலியானார்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சியை அடுத்த வஞ்சியாபுரத்தை சேர்ந்தவர்கள் வினித் (வயது 18), சரவணன் (17), ஜெயகணேஷ் (21). இவர்கள் 3 பேரும் தென்னை மட்டைகளை லாரி, வேன்கனில் ஏற்றி, இறக்கும் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆனைமலை அருகே உள்ள சோமந்துறை சித்தூரில் தென்னை மட்டைகளை ஏற்றியதற்கான கூலியை பொள்ளாச்சியில் உள்ள மாரியப்பன் என்பவரிடம் வாங்கினார்கள். பின்னர் ஒரே மோட்டார் சைக்கிளில் வஞ்சியாபுரம் நோக்கி இரவு 10.50 மணி அளவில் திரும்பிக் கொண்டு இருந்தனர்.
மோட்டார் சைக்கிளை வினித் ஓட்டினார். மோட்டார் சைக்கிள் பொள்ளாச்சி–கோட்டூர் மெயின் ரோடு சூளேஸ்வரன்பட்டி என்.ஜி..ஓ. காலனி அருகே வந்தபோது, கோட்டூரில் இருந்து வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்த 3 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் செல்லும் வழியிலேயே வினித் பரிதாபமாக இறந்தார். சரவணன், ஜெயகணேஷ் ஆகிய இருவருக்கும் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. ஆனால் காரில் இருந்த சண்முகம் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஒரே கிராமத்தைசேர்ந்த 3 தொழிலாளர்கள் விபத்தில் பலியான சம்பவம் வஞ்சியாபுரம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை கணபதிபாளையத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (22). இவர், கோவிந்தாபுரத்தில் பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வந்தார். நேற்று காலை கொடிங்கியத்தில் உள்ள தனது அக்காள் வெங்கடேஷ்வரியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பொள்ளாச்சி–மீன்கரை ரோடு வனத்துறை அலுவலகம் அருகில் வந்த போது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த ரங்கநாதன் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.