திருப்பூர் மாவட்டத்தில் 3–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்த போராட்டம், ரூ.5 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் 3–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் காங்கேயம் பகுதியில் ரூ.5 கோடிக்கு தேங்காய் எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
திருப்பூர்,
டீசல் மற்றும் பெட்ரோலுக்கான விலையை குறைக்க வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சங்கம் மற்றும் உறுப்பினர் சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 20–ந் தேதி தொடங்கிய இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஏராளமான லாரிகள் இயக்கப்படவில்லை. திருப்பூர் மாவட்டத்திலும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3–வது நாளாக போராட்டம் நடந்தது. லாரிகள் இயக்கப்படாததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லாரிகள் ஆங்காங்கே பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த போராட்டம் காரணமாக திருப்பூரில் பின்னலாடை தொழில்துறையினர் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். திருப்பூரில் இருந்து சரக்குகளை வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு அனுப்ப முடியாமல் தொழில்துறையினர் திணறி வருகிறார்கள். இதன் காரணமாக பின்னலாடை சரக்குகள் அனைத்தும் அந்தந்த நிறுவனங்களிலேயே தேக்கமடைந்து உள்ளன.
இதனால் ரூ.300 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்தனர். இது ஒருபுறம் இருக்க திருப்பூர் உழவர் சந்தைக்கு உடுமலை, பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக விவசாயிகள், வியாபாரிகள் காய்கறி மூடைகள் மற்றும் சரக்குகளை அரசு பஸ்களில் ஏற்றி விற்பனைக்காக கொண்டு சென்றனர். இதனால் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் பகுதிகளில் சரக்குகள், காய்கறி மூடைகள் அதிகமாக காணப்பட்டன.
இதுபோல் காங்கேயத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு தேங்காய் எண்ணெய் ஏற்றி செல்லும் டேங்கர் லாரிகள் மற்றும் கொப்பரை ஏற்றிச்செல்லும் லாரிகள் என சுமார் 200–க்கும் மேற்பட்ட லாரிகள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அத்துடன் வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் தேங்காய் லாரிகளும் வரவில்லை. அரிசி ஆலைகள் நிறைந்த இந்த பகுதிக்கு ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளும் வரவில்லை.
இது குறித்து தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் டி.அருணாசலம் கூறியதாவது:–
லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக காங்கேயம் பகுதியில் தேங்காய் எண்ணெய் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உற்பத்தி செய்யப்பட்ட எண்ணெய், கொப்பரை ஆகியவை பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதுபோல் மற்ற பகுதிகளில் இருந்து வர வேண்டிய லாரிகளும் வராததால் களங்களில் தேங்காய் உடைப்பு பணி நடைபெறவில்லை.
இந்த போராட்டம் காரணமாக காங்கேயம் தாலுகா பகுதியில் மட்டும் தினசரி சுமார் ரூ.5 கோடிக்கு தேங்காய் எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலை நம்பியுள்ள சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்களும் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.