லாரிகள் வேலை நிறுத்தம் 3–வது நாளாக நீடிப்பு கர்நாடகத்தில் ரூ.23 ஆயிரம் கோடி சரக்குகள் தேக்கம் ரூ.350 கோடி வருவாய் இழப்பு

லாரிகள் வேலை நிறுத்தம் நேற்று 3–வது நாளாக நீடித்தது. இதனால் கர்நாடகத்தில் ரூ.23 ஆயிரம் கோடி சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.

Update: 2018-07-22 23:00 GMT

பெங்களூரு, 

லாரிகள் வேலை நிறுத்தம் நேற்று 3–வது நாளாக நீடித்தது. இதனால் கர்நாடகத்தில் ரூ.23 ஆயிரம் கோடி சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. மாநில அரசுக்கு தினமும் ரூ.350 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

6 லட்சம் லாரிகள் ஓடவில்லை

நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், 3–வது நபர் இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் கடந்த 20–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3–வது நாளாக நேற்றும் தமிழகம், கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தது. நாடு முழுவதும் சுமார் 90 லட்சம் லாரிகளும், கர்நாடகத்தில் 6 லட்சம் லாரிகளும் ஓடவில்லை.

இதனால் கர்நாடகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் உள்ள ஏ.பி.எம்.சி. சந்தையில் வெங்காயம், துவரம் பருப்பு, மிளகாய் வத்தல் உள்பட பல்வேறு வகையான உணவு தானியங்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதன் மதிப்பு ரூ.23 ஆயிரம் கோடி என்று மதிப்பிடப்படுகிறது. இதனால் பெங்களூரு யஷ்வந்தபுரத்திற்கு வந்த லாரிகளும் இங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கர்நாடக லாரி உரிமையாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் சங்க கூட்டமைப்பு தலைவர் சண்முகப்பா கூறியதாவது:–

ரூ.23 ஆயிரம் கோடி சரக்குகள்

டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20–ந் தேதி முதல் நாடு தழுவிய அளவில் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மட்டும் 6 லட்சம் லாரிகள் ஓடவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் சுமார் 14 ஆயிரம் லோடு சரக்குகள் தேங்கியுள்ளன. இதில் பெங்களூருவில் மட்டும் 7 ஆயிரம் லோடு சரக்குகள் அடங்கும். அதாவது ரூ.23 ஆயிரம் கோடி சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.

கர்நாடகத்தில் இருந்து வெங்காயம், காய்கறிகள், சிமெண்டு, ஆயத்த ஆடைகள், நெல், துவரம் பருப்பு, மக்காச்சோளம், இரும்பு கம்பிகள் உள்பட பல்வேறு உற்பத்தி பொருட்கள் லாரிகள் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், மேற்கு வங்கம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த சரக்குகள் அனைத்தும் தேங்கியுள்ளன. வேலை நிறுத்த போராட்டத்தால், கர்நாடக அரசுக்கு தினமும் ரூ.350 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களில் மாநில அரசுக்கு ரூ.1,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை நாங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற மாட்டோம்.

போராட்டம் மேலும் தீவிரம்

அகில இந்திய அளவில் லாரிகள் வேலை நிறுத்தத்தால் சுங்கச்சாவடிகளுக்கு தினமும் ரூ.40 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து சில லாரிகள் கர்நாடகத்திற்கு வந்தது. அந்த லாரிகளையும் நாங்கள் தடுத்து நிறுத்தி இருக்கிறோம். இந்த வேலை நிறுத்த போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

இவ்வாறு சண்முகப்பா கூறினார்.

மேலும் செய்திகள்