பாடாலூர் அருகே கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலி

பாடாலூர் அருகே கார் மோதி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-07-22 22:15 GMT
பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம் கோனேரி பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் மீனா (வயது 22). மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் மருதுபாண்டி (25). இவர்கள் இருவரும் பாடாலூர் அருகே விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியார் பால் பண்ணையில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை வேலையை முடித்து விட்டு இருவரும் வீட்டிற்கு செல்வதற்காக விஜயகோபாலபுரம் பஸ் நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, அந்த வழியாக சென்னையில் இருந்து கொடைக்கானல் நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மீனா, மருதுபாண்டி மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பாடாலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீனா, மருதுபாண்டி ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் காரில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த கார் டிரைவரான ஸ்ரீதரை (34) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதி 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற் படுத்தியது. 

மேலும் செய்திகள்