கூட்டுறவு சங்க செயல்பாட்டில் தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்படுகிறது, அமைச்சர் செல்லூர் ராஜூ
கூட்டுறவு சங்க செயல்பாட்டில் தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்படுகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
கோவை,
கோவை ஒண்டிப்புதூர் சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடி வளாகத்தில் ரூ.95 லட்சம் செலவில் 2 திருமண மண்டபங்கள் மற்றும் ஒரு மினி ஹால் ஆகியவை கட்டப்பட்டுள்ளது. இவற்றின் திறப்பு விழா நேற்று மதியம் நடந்தது. விழாவுக்கு வந்தவர்களை சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடி தலைவர் சிங்கை என்.முத்து வரவேற்றார்.
புதிய திருமண மண்டபங்களை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர். அதன்பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது:–
கடந்த 7 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாட்டில் தேசிய அளவில் 22 பரிசுகளை பெற்று மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது. கோவை சிந்தாமணி கூட்டுறவு சங்கம் நலிவடைந்ததால் 2011–ம் ஆண்டு மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ரூ.1.84 கோடி வழங்கியதால், இன்று சிந்தாமணி கூட்டுறவு பண்டகசாலைகளில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்பட்டு கூட்டுறவு மருந்தகங்கள், எழுதுபொருட்கள் விற்பனை என பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
சிந்தாமணி கூட்டுறவு பண்டக சாலைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் அதன் தலைவரின் முயற்சியால் அடுத்த மைல் கல்லாக ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 203 பேருக்கு ரூ.1,285 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடனை திருப்பி செலுத்தியவர்களுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:– கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கென்று, காந்திபுரம் மேம்பாலம், ஆத்துப்பாலம் மேம்பாலம், மேற்கு புறவழிச்சாலை, அவினாசி உயர்மட்ட மேம்பாலம், 24 மணி நேர குடிநீர் வழங்கும் திட்டம் என பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் சமீபகாலமாக 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டம் தொடர்பாக குழப்பத்தினை ஏற்படுத்த வேண்டும் என்றும், இத்திட்டத்தை செயல்படுத்தினால் அனைவருக்கும் உறுதி செய்யப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் சிலர் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இது மக்களால் ஏற்படுத்தப்பட்ட அரசு. மக்களுக்கு நலன் பயக்கும் திட்டங்களை தவிர வேறு எவரின் சுய லாபத்திற்காகவும் செயல்படாத அரசாகவும் இன்றும், என்றும் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:– கூட்டுறவு சங்கங்களின் விதிகளின்படி, பொது வினியோகத்திட்டத்திற்கும், கூட்டுறவு சங்கங்களுக்குமான காலியாக உள்ள இடங்களில், பணியாளர்கள் தேர்வு விரைவில் நடைபெறும். தமிழகத்தில் மாநில கட்சிகள் ஆளும் நிலை தான் ஏற்படும். டி.டி.வி. தினகரன் நடத்தும் கூட்டத்துக்கு ஆட்கள் அழைத்து வரப்படுகிறார்கள். அவருக்கு கூட்டம் கூடுவது முக்கியம் அல்ல. ஓட்டு விழுமா என்பது தான் முக்கியம். ரூ.10 ஆயிரம் கோடியில் சென்னை–சேலம் 8 வழி சாலை, மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி போன்ற பல்வேறு திட்டங்கள் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படுகிறது. இதனால் குறை எதுவும் கூற முடியவில்லை. இது பொறுக்க முடியாத தி.மு.க.வினர் பொய்யான குற்றச்சாட்டுகளை இந்த ஆட்சியின் மீது கூறுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.