தி.மு.க. பிரமுகர் மர்ம சாவு: கொலை செய்யப்பட்டதாக கூறி உடலை உறவினர்கள் வாங்க மறுப்பு

மூவாநல்லூரில் தி.மு.க. பிரமுகர் மர்மமான முறையில் இறந்தார். இவர் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-22 22:30 GMT
சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே மூவாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 52). விவசாயியான இவர் மூவாநல்லூர் பகுதியில் தி.மு.க. கிளை செயலாளராக இருந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் காலை அதே பகுதியில் உள்ள தனது தென்னந்தோப்புக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் செல்வகுமார் தனது தென்னந்தோப்பிற்கு அருகில் உள்ள சாலை ஓரத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மன்னார்குடி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை முடிந்து செல்வகுமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் செல்வகுமாரின் உறவினர்கள் அவரின் உடலை வாங்க மறுத்தனர். அப்போது செல்வகுமாரின் மரணத்தில் மர்மம் உள்ளது என்றும், அவரை யாரோ தாக்கி கொலை செய்திருக்கிறார்கள் என்றும், கொலை செய்தவர்களை கைது செய்தால் தான் உடலை வாங்கி செல்வோம் என கூறினர்.

இதனையடுத்து மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், செல்வ குமாரின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கொலை நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தால் கண்டிப்பாக குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதில் உடன்பாடு ஏற்படாததால் செல்வகுமாரின் உறவினர்கள் அவரது உடலை வாங்காமல் திரும்பி சென்று விட்டனர். இதனால் செல்வகுமாரின் உடல் மன்னார்குடி அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் மன்னார்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்