அரக்கோணம் அருகே போலீஸ்காரரின் மனைவி தூக்கில் பிணமாக கிடந்தார்

அரக்கோணம் அருகே போலீஸ்காரரின் மனைவி தூக்கில் பிணமாக கிடந்தார். வீட்டில் இருந்து இந்தியில் எழுதப்பட்ட கடிதம் சிக்கியது.

Update: 2018-07-22 23:15 GMT
அரக்கோணம்,

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள தக்கோலத்தை அடுத்த நகரிகுப்பத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய பேரிடர் மீட்பு படை மையம் உள்ளது. இந்த மையத்தில் உத்தரபிரதேச மாநிலம், மாவ் மாவட்டத்தை சேர்ந்த துர்கா சவுகான் (வயது 30) என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுமன் சவுகான் (24). இவர்களுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 3 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் குடும்பத்துடன் தக்கோலம், பஜார் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல துர்கா சவுகான் வேலைக்கு சென்றுவிட்டார். சுமன் சவுகான், குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தார். பகல் 1 மணி அளவில் துர்கா சவுகான் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவி சுமன் சவுகான் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து துர்கா சவுகான் மயங்கி விழுந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தக்கோலம் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த சுமன் சவுகானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வீட்டில் மயங்கி கிடந்த துர்கா சவுகானை சிகிச்சைக்காக தக்கோலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரக்கோணம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர்கள் முத்துராமலிங்கம், ஷியாமளா ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று, துர்கா சவுகானை பார்த்தவுடன் தெளிவாக இருப்பது போல் தெரிந்தது. ஆனாலும் போலீசார், டாக்டர்களை அழைத்து அவரை பரிசோதனை செய்ய கூறினார்கள்.

இதனையடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது அவர் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது. ஆனால் அவர், மேலும் மயக்கமாக இருப்பது போல் நடிப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே மயக்கவியல் துறை ஊழியரை அழைத்து ‘டிஞ்சர்’ எனப்படும் மருந்தை துர்கா சவுகான் மூக்கில் தடவினார். மருந்து தடவியவுடன் துள்ளி குதித்து எழுந்தார். பின்னர் போலீசார், துர்கா சவுகானை விசாரணைக்காக டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும் போலீசார், துர்கா சவுகான், சுமன் சவுகான் ஆகியோரின் செல்போன்களை பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இந்தியில் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவம் குறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுமன் சவுகான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுமன் சவுகானிற்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன் மேல் விசாரணை நடத்தி வருகிறார். 3 மாத ஆண் குழந்தை தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் ஒரு அதிகாரியின் மேற்பார்வையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்