சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் ‘திடீர்’ நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு

சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகி இருந்தது. இதனால் மக்கள் பீதியில் வீடுகளில் இருந்து வெளியே ஓடிவந்தனர்.

Update: 2018-07-22 23:15 GMT

சேலம்,

சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 7.47 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. சில வினாடிகள் மட்டுமே நீடித்த இந்த நிலநடுக்கத்தால் வீடுகளும், உயரமான கட்டிடங்களும் லேசாக குலுங்கின. இதனால் வீடுகளில் வசித்த பொதுமக்கள் பீதியில் அலறி அடித்துக்கொண்டு வெளியே வீதிக்கு ஓடிவந்தனர்.

சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் நேற்று காலையில் நில அதிர்வை உணர்ந்ததாகவும், வீடுகளில் இருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட சில பொருட்களில் லேசாக அசைவு ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

சேலம் புறநகர் பகுதிகளில் ஓமலூர், மேட்டூர் உள்பட பல்வேறு இடங்களிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஓமலூர் பகுதியில் சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்காட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக விடுதிகள், ஓட்டல்களில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் வீதிக்கு ஓடிவந்தனர்.

சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தில் நிலநடுக்கத்தை பதிவு செய்யும் கருவி பழுதாகி உள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் எவ்வளவு பதிவானது என்பதை கணிக்க முடியவில்லை. டெல்லியில் உள்ள வானிலை ஆய்வு மைய தலைமையிடத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சேலத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகி இருப்பதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரோகிணி, ‘‘சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காடையாம்பட்டி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 7.47 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் லேசான நிலநடுக்கம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்திலும் நல்லம்பள்ளி, ஏரியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சத்தத்துடன் நேற்று காலை 7.47 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீட்டில் உள்ள பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தன. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். தர்மபுரி மாவட்டத்தில் வேறு எங்காவது நில அதிர்வு ஏற்பட்டதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சேலத்தில் ஏற்பட்ட நில அதிர்வு ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியிலும் உணரப்பட்டது. சுமார் 2 வினாடிகள் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீடுகளில் உள்ள பாத்திரங்கள் லேசாக ஆடின. ஆனால் வீடுகள், கட்டிடங்களில் எந்த அதிர்வும் இல்லை. மக்கள் கூறும்போது, ‘ரோடுகளில் வாகனங்கள் வேகமாக சென்றால் ஏற்படும் ஒரு அதிர்வை போல் இருந்தது. வேறு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை’ என்றார்கள்.

மேலும் செய்திகள்