கார்கள் நேருக்கு நேர் மோதியதில் கணவன், மனைவி உள்பட 4 பேர் பலி 3 வாலிபர்கள் படுகாயம்

திருச்செங்கோடு அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் கணவன், மனைவி உள்பட 4 பேர் பலியானார்கள். 3 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-07-22 23:00 GMT

எலச்சிபாளையம்,

ஈரோடு கருங்கல்பாளையம் பச்சியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பிரபாகர் (வயது 56). இவர் ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் கார் பழுதுபார்க்கும் பட்டறை நடத்தி வந்தார். பிரபாகர் மனைவி கவிதா (45). பி.எஸ்சி, பி.எட். படித்துள்ள இவர் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வந்தார்.

நேற்று பிரபாகர், கவிதா, மகன் அஸ்வந்த் (20) ஆகியோர் ஒரு காரில் கருங்கல்பாளையத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அஸ்வந்த் காரை ஓட்டி வந்தார்.

திருச்செங்கோடு–ராசிபுரம் சாலையில் எலச்சிபாளையத்தில் மோர்பாளையம் பிரிவுரோட்டில் நேற்று மதியம் 1.45 மணியளவில் கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது பெங்களூரு பி.இ.எம்.எல். லே–அவுட் தம்புசெட்டி பையாவைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஆல்பர்ட் ஜான் (30), பெங்களூரு கே.ஆர்.புரம் ஆனந்தபுரா 4–வது தெரு ஜோசப்ராஜ் மகன் பிரதீப் (30), ஷாம்குமார் (29), சுனில் (29) ஆகியோர் மற்றொரு காரில் திருச்செங்கோடு நோக்கி சென்றனர். ஆல்பர்ட் ஜான் காரை ஓட்டினார். இவர்கள் 4 பேரும் வெண்ணந்தூர் மதியம்பட்டி சவுரிபாளையம் சென்று விட்டு வழிதெரியாமல் ராசிபுரத்தில் இருந்து பெங்களூரு செல்ல வேண்டியவர்கள் திருச்செங்கோடு நோக்கி வந்தனர்.

அஸ்வந்த ஓட்டிவந்த காரும், ஆல்பர்ட் ஜான் ஓட்டிவந்த காரும் மோர்பாளையம் பிரிவுரோட்டில் வந்தபோது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் பிரபாகர், கவிதா, அஸ்வந்த், ஆல்பர்ட் ஜான் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும் பிரதீப், ஷாம்குமார், சுனில் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் அந்த பகுதி மக்கள் திரண்டு வந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 3 பேரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, திருச்செங்கோடு துணை சூப்பிரண்டு சண்முகம், எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். விபத்து பற்றி போலீஸ் சூப்பிரண்டு அருளரசு விசாரித்தார். இதுபற்றி எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் பொன்.சரஸ்வதி எம்.எல்.ஏ. திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சென்று, காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.

கார்கள் நேருக்கு நேர் மோதி 4 பேர் பலியான விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்