விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு வீடு திரும்பிய வாலிபர் ஆஸ்பத்திரியில் திடீர் அனுமதி தாராவி போலீஸ் நிலையம் முற்றுகை

போலீஸ் விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்டு வீடு திரும்பிய வாலிபர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2018-07-21 23:30 GMT
மும்பை, 

போலீஸ் விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்டு வீடு திரும்பிய வாலிபர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தாராவி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போலீஸ் விசாரணை

மும்பை தாராவி ராஜூவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் சச்சின்(வயது17). இவரை கடந்த சில நாட்களுக்கு முன் தாராவி போலீசார் திருட்டு வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்த அழைத்து சென்றனர். இந்தநிலையில் விசாரணைக்கு பிறகு வீடு திரும்பிய வாலிபருக்கு திடீரென உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல் நிலை மோசமானது.

இதனால் பதறிப்போன வாலிபரின் குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக சயான் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் போராட்டம்

இந்தநிலையில் போலீசார் தாக்கியதால் தான் வாலிபரின் உடல்நிலை மோசமானதாக கூறி, அவரது குடும்பத்தினர், அப்பகுதி மக்கள் மற்றும் பகுஜன் சமாஜ்வாடி கட்சியினர் நேற்று காலை தாராவி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் வாலிபரை தாக்கிய போலீசாரை பணி இடைநீக்கம் செய்யவேண்டும் என வலியுறுத்தினர்.

இது குறித்து தாராவி போலீசாரிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட வாலிபர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினர்.

மேலும் செய்திகள்