கோட்டூர்புரத்தில் அடையாறு ஆற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை பெற்றோர் திட்டியதால் விபரீத முடிவு

கோட்டூர்புரத்தில் பெற்றோர் திட்டியதால் அடையாறு ஆற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-07-21 22:19 GMT
அடையாறு, 

சென்னை கோட்டூர்புரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் ரம்யா (வயது 19). அடையாறில் உள்ள கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

ரம்யா நேற்று முன்தினம் மாலை வீட்டில் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது பெற்றோருடன் அவர் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இதனால் அவரை பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. உடனே பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு ரம்யா வெளியே சென்றார்.

ஆற்றில் குதித்து தற்கொலை

கோட்டூர்புரம் பாலத்திற்கு சென்ற ரம்யா, திடீரென பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஆற்றில் இறங்கி மாணவியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட தேடுதலுக்கு பின்னர் நேற்று காலை உடல் மீட்கப்பட்டது. ரம்யாவின் பெற்றோருக்கு 2 மகள்கள். அதில் மூத்த மகள் ஏற்கனவே நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார். இளையமகளும் தற்கொலை செய்து கொண்டதால், தாங்கள் அனாதையாகி விட்டதாக கூறி அவர்கள் கதறி அழுதனர்.

உடலை கைப்பற்றிய போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்