ஏரியூர் நீர்த்தேக்க பகுதியில் வாழை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

ஏரியூர் நீர்த்தேக்க பகுதியில் வாழை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2018-07-21 22:45 GMT
ஏரியூர்,

மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறையும் போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள ஒட்டனூர், நாகமரை, செல்லமுடி, பூச்சூர், கவுண்டனூர், நெருப்பூர், மலையனூர், ராமகொண்டஅள்ளி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் நீர்த்தேக்க பகுதியில் ஆற்றங்கரையில் விவசாயம் செய்வது வழக்கம்.

இந்தாண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையத்தொடங்கியதால் நீர்த்தேக்க பகுதியில் விவசாயிகள் கம்பு, ராகி, சோளம், எள், நிலக்கடலை மற்றும் கத்தரி, வெண்டை, மிளகாய், வாழை உள்ளிட்டவைகளை பயிரிட்டு இருந்தனர். இந்த பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. சில விவசாயிகள் எள், சோளம் உள்ளிட்ட பயிர்களை அறுவடை செய்ய தொடங்கினர்.

இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த தண்ணீர் மேட்டூர் அணையை நோக்கி வந்ததால் அணை 100 அடியை எட்டி வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் ஏரியூர் நீர்த்தேக்க பகுதியில் பயிரிட்டு இருந்த சோளம், ராகி, எள், கம்பு, வாழை, தக்காளி, கத்தரி உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

இதனால் கவலை அடைந்த விவசாயிகள் தண்ணீரில் மூழ்கிய வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்