நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவா? முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா பதில்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவா? என்பது குறித்து முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா பதில் அளித்துள்ளார்.

Update: 2018-07-21 23:00 GMT

பெங்களூரு, 

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவா? என்பது குறித்து முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா பதில் அளித்துள்ளார்.

தேசிய அரசியலில் ஈடுபட...

காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினராக முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மாநில அரசியலில் இருந்து விலகி தேசிய அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சித்தராமையா போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

– போட்டியிடும் ஆசை இல்லை

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினராக என்னை நியமித்துள்ளார். டெல்லியில் நாளை(அதாவது இன்று) நடைபெற உள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளேன். இதற்காக மாநில அரசியலில் இருந்து விலகி தேசிய அரசியலில் ஈடுபட போவதாக வெளியான தகவல்கள் உண்மையல்ல. நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட போவதாக வந்த தகவல்களும் தவறானது. அதுபற்றி நான் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஆசையும் எனக்கு இல்லை.

நாடாளுமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சி மேலிடம் எனக்கு எந்த விதமான பொறுப்பு கொடுத்தாலும், அதனை சரியாக நிர்வகிப்பேன். விவசாயிகள் மீது மத்திய பா.ஜனதா அரசுக்கு அக்கறை இல்லை. தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பிரதமராக இருந்த மன்மோகன்சிங், விவசாயிகள் கடன் ரூ.72 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்திருந்தார்

. மக்கள் விரோத ஆட்சி

நான் முதல்–மந்திரியாக இருந்தபோது கூட விவசாயிகள் வாங்கி இருந்த ரூ.50 ஆயிரம் வரையிலான கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டேன். மதவாத அரசியலில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது. பா.ஜனதா ஆட்சியில் விலைவாசி உயர்வு, பணமதிப்பீட்டு இழப்பால் விவசாயிகள், சாதாரண மக்கள் மிகுந்த தொல்லையை அனுபவித்து வருகின்றனர். மக்கள் விரோத ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் ஒன்று சேர தயாராகி வருகின்றன.

சட்டசபை தேர்தலுக்கு முன்பாக மகதாயி நதிநீர் பிரச்சினையை 15 நாட்களில் தீர்த்து வைப்பேன் என்று எடியூரப்பா கூறி இருந்தார். தற்போது தேர்தல் முடிந்து மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் மகதாயி நதிநீர் பிரச்சினையை எடியூரப்பா தீர்க்கவில்லை. அதுகுறித்து பேசாமல் மவுனமாக இருக்கிறார். மத்தியில் பா.ஜனதா ஆட்சியில் பெண்களுக்கும், தலித் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. சிறுபான்மையின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்