கூட்டணி ஆட்சிக்கு எதிராக பகிரங்கமாக கருத்து தெரிவிக்க கூடாது காங்கிரஸ் தலைவர்களுக்கு, வேணுகோபால் எச்சரிக்கை

கூட்டணி ஆட்சிக்கு எதிராக பகிரங்கமாக கருத்து தெரிவிக்க கூடாது என்று காங்கிரஸ் தலைவர்களுக்கு மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-07-21 23:30 GMT

பெங்களூரு, 

கூட்டணி ஆட்சிக்கு எதிராக பகிரங்கமாக கருத்து தெரிவிக்க கூடாது என்று காங்கிரஸ் தலைவர்களுக்கு மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூத்த தலைவர்கள் கருத்து

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்–மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்–மந்திரியாக பரமேஸ்வரும் இருந்து வருகின்றனர். சமீபத்தில் கூட்டணி ஆட்சிக்கு எதிராக முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா, சில மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்தார்கள். இதனால் கூட்டணி ஆட்சி நீண்ட நாட்கள் நிலைக்காது என்று தகவல்கள் பரவியது. இதனால் முதல்–மந்திரி குமாரசாமி, காங்கிரஸ் தலைவர்கள் மீது கடும் அதிருப்தி அடைந்தார்.

இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, துணை முதல்–மந்திரி பரமேஸ்வர், முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா, கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வேணுகோபால் எச்சரிக்கை

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சிக்கு எதிராக பகிரங்கமாக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கருத்து தெரிவிக்கக்கூடாது என்றும், கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அதுபற்றி கட்சியின் தலைவர்களிடையே பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என்றும், தனிப்பட்ட முறையில் விமர்சிக்க கூடாது என்றும், அவ்வாறு கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் எச்சரிக்கை விடுத்திருப்பதாக தெரிகிறது.

அதே நேரத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ளதால், நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்றும், அதனால் கூட்டணி குறித்து மூத்த தலைவர்கள் யாரும் எந்த தகவலையும் தெரிவிக்க கூடாது எனவும் வேணுகோபால் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்காக இப்போதில் இருந்தே அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என்றும் வேணுகோபால் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்