4 நாட்களாக நடைபெற்று வந்த அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் வாபஸ்
புதுவையில் 4 நாட்களாக நடைபெற்று வந்த அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.;
புதுச்சேரி,
புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் இந்த ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது. இதில் அதிக படியாக முதலாம் ஆண்டு சேர இருக்கும் மாணவர்களுக்கு ரூ.1லட்சத்து 37 ஆயிரம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கடந்த 18–ந் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நாளை(திங்கட்கிழமை) மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வராவிட்டால் பல்கலைக்கழக தேர்வுகள் எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். கல்லூரி விடுதியைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று கல்லூரி நிர்வாகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று அவர்கள் 4–வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கல்லூரி வளாகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து அந்த பந்தலை பிரிக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் உதவியுடன் பந்தலில் அமர்ந்து போராட்டம் நடத்திய மாணவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். பின்னர் பந்தல் பிரிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் கல்லூரியின் நுழைவுவாயில் படிக்கட்டில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை அவர்கள் தங்கள் போராட்டத்தினை வாபஸ் பெற்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:– நாளை மறுநாள்(நாளை திங்கட்கிழமை) வகுப்புகளுக்கு வரவில்லை என்றால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக நாங்கள் போராட்டம் நடத்தினோம். கல்லூரி நிர்வாகமும், அரசும் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வில்லை. எனவே எங்கள் படிப்பு பாதிக்கும் என்பதால் நாங்கள் போராட்டத்தினை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.