மேட்டூரில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் மாயனூர் கதவணைக்கு வந்து சேர்ந்தது விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மாயனூர் கதவணைக்கு வந்து சேர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;

Update: 2018-07-21 22:45 GMT
கிருஷ்ணராயபுரம்,

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் இது கடந்த சில ஆண்டுகளாக அணையில் போதிய தண்ணீர் இல்லாமையால் நடைமுறைப்படுத்தப்படாமல் பின்னர் கிடைக்கும் தண்ணீரை பொறுத்து திறந்துவிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் ஜூன் 12-ந் தேதி அணை திறக்கப்படும் என எதிர்பார்த்த டெல்டா பாசன விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சி, சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா? என்ற கவலையில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடகா, கேரளா மாநிலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாகி நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. இதையடுத்து கடந்த 19-ந் தேதி தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையிலிருந்து 2 ஆயிரம் கன அடி தண்ணீரை டெல்டா பாசன விவசாயத்திற்கு திறந்து விட்டார்.

பின்னர் அணைக்கு வரும் நீரின் வரத்தை பொறுத்து படிப்படியாக அதிகரித்து 20 ஆயிரம் கனஅடி நீர் வரை திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை கடந்து நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மாயனூர் கதவணைக்கு வந்து சேர்ந்தது. ஏற்கனவே அமராவதி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரும் சேர்ந்து 19 ஆயிரம் கன அடி நீர் கதவணையிலிருந்து அப்படியே திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவையும், திறந்து விடப்பட்டுள்ள நீரின் அளவையும் பொதுப் பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு கண்காணிப்பு பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் கார்த்திக் ஆகியோர் பார்வையிட்டனர். இதுகுறித்து கண்காணிப்பு பொறியாளர் ரவிச்சந்திரன் கூறும்போது, கதவணை பகுதிக்கு வரும் தண்ணீர் டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது என்பதால் சேமித்து வைக்கப்படாமல் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கல்லணைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து டெல்டா பாசனத்திற்காக உடனடியாக தண்ணீர் திறந்துவிடப்படும் என கூறினார். 

மேலும் செய்திகள்