ரூ.77 கோடி நிதி ஒதுக்கப்பட்டு குடிநீர் மேம்பாட்டு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன அமைச்சர் தகவல்

ரூ.77 கோடி நிதி ஒதுக்கப்பட்டு குடிநீர் மேம்பாட்டு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2018-07-21 23:00 GMT
கரூர்,

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட கரூர், இனாம் கரூர், தாந்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிதாக குடிநீர் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் புதிதாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது, பாதாள சாக்கடை இணைப்பு கொடுப்பது, சாலை வசதியினை மேம்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வுக்கூட்டம் கரூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி, இதுவரை மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். கூட்டத்துக்கு கரூர் நகராட்சி ஆணையர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். இதில் நகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

கரூர் நகராட்சியில் ரூ.77 கோடி நிதி ஒதுக்கப்பட்டு குடிநீர் மேம்பாட்டு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. வீடுகளிலுள்ள பழைய இணைப்பை சீர் செய்வது, புதிய இணைப்பு என 46 ஆயிரம் குடிநீர் இணைப்பு பணிகள் நடந்து வருகின்றன. மேலும் தூய்மையான நகராட்சியை உருவாக்கும் பொருட்டு 8 ஆயிரம் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க நிதி பெறப்பட்டு பணிகள் நடக்கின்றன. புதிய சாலை அமைக்கப்படுவதற்கு முன்னதாக பாதாள சாக்கடை பணி உள்ளிட்டவற்றை முடிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது குடிநீர் இணைப்பு புதிய குழாயினை அவர் நிருபர்களிடம் காண்பித்தார். 

மேலும் செய்திகள்