“ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது” அமைச்சர் செல்லூர் ராஜூ ஒப்புதல்
ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை,
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் காவிரி பிரதான குடிநீர் குழாய் சேதம் அடைந்துள்ளது. அதனை சரி செய்யும் பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று பா.ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் ஆகியோர் ஆலோசனை நடத்தி நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக அ.தி.மு.க. வாக்களித்தது. இது நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவாகும்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லாமல் தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தது வேடிக்கையாக உள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு குறித்து அமித்ஷாவின் கருத்து பொதுவாக சொல்லப்பட்டது. அ.தி.மு.க. தான் என்று அவர் குறிப்பிட்டு கூறவில்லை. ஊழல் என்பது எல்லா காலத்திலும் நடந்து இருக்கிறது. தற்போது ஊடகங்கள் அதிகரித்துவிட்டதால் ஊழல்கள் வெளி உலகத்திற்கு தெரிகின்றன.
ராகுல்காந்தி வளர்ந்து வரக்கூடிய ஒரு இளம் தலைவர். அவருடைய தந்தை ராஜீவ்காந்தி போல, எளிமையாக பழகுவார். நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி, மோடியை கட்டிப்பிடித்தது அரசியல் நாகரிகமானது.
இவ்வாறு அவர் கூறினார்.