ராஜபாளையம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் கைது
ராஜபாளையம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியி்ல் 124 மாணவிகள் உள்பட 296 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த முருகேசன் என்பவர் பணியாற்றி வருகின்றார். கடந்த சில தினங்களாக அப்பள்ளியில் பயிலும் சில மாணவிகள் வீட்டில் மன வருத்தத்தில் இருந்துள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர் தங்களது பிள்ளைகளிடம் விசாரித்துள்ளனர். அவர்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாகவும், பாலியல் ரீதியில் தொந்தரவு தருவதாகவும், மேலும் செல்போனில் ஆபாசமாக படம் பிடித்து காண்பிப்பதாகவும், இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் பள்ளியை விட்டு விலக்கி விடுவேன் என்று மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் 30–க்கும் மேற்பட்டோர் பள்ளியில் முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் முறையான பதில் தெரிவிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் முருகேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட அதிகாரி சர்வேசுவரன், தாசில்தார் ராமச்சந்திரன், ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் பள்ளி வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் முருகேசனை ராஜபாளையம் வடக்கு போலீசார் நேற்று கைது செய்தனர்.