2 ஆண்டுகளாக நடைபெறும் கெரடா மட்டம்–சுண்டட்டி சாலை பணியை விரைவாக முடிக்க வேண்டும், கலெக்டருக்கு கோரிக்கை
2 ஆண்டுகளாக நடைபெறும் கெரடா மட்டம் – சுண்டட்டி சாலை பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உள்ள கெரடாமட்டத்திலிருந்து சுண்டட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை பணிகள் தொடங்கி சுமார் இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவு பெறாத நிலையில் உள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:–
கோடநாடு ஊராட்சிக்குட்பட்ட சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் சாலைகள் இல்லாத கிராம பகுதிகளில் புதியதாக சாலைகள் மற்றும் கிளை சாலைகள் அமைக்க நீலகிரி மாவட்ட முன்னாள் கலெக்டர் சங்கர் மற்றும் ஊராட்சி தலைவர் தேவராஜ் ஆகியோர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் காரணமாக கிராமப்புற பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் தங்களது விளைநிலங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு சரக்கு வாகனங்கள் மூலம் இடுபொருட்கள் மற்றும் உரங்களை கொண்டு செல்லவும், விளைந்த காய்கறிகள், பசுந்தேயிலையை சுமந்து செல்லாமல் வாகனங்கள் மூலமாகவே கொண்டு செல்லவும் வழிமுறை ஏற்பட்டது.
இந்த நிலையில் கோடநாடு அருகே உள்ள சுண்டட்டி கிராமத்தில் சுமார் 220–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கொட்டநள்ளி வழியாக மட்டும் தார்ச்சாலை இருந்த நிலையில் கெரடாமட்டத்திற்கு சுண்டட்டி வரை பல கிராமங்களை இணைக்கும் வகையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு மிக அகலமான கான்கிரீட் சாலை அமைக்க ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் நிதியை அப்போதைய கலெக்டர் சங்கர் ஒதுக்கி உத்தரவிட்டார். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி சுமார் இரண்டு ஆண்டு காலமாகியும் சாலை பணிகள் இன்னும் நிறைவு பெறாமல் ஆமை வேகத்தில் நடைப்பெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலை முழுவதும் கற்கள் சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகளும் இந்த சாலை வழியாக செல்ல முடியாமல் மாற்றுச் சாலை வழியாக பல கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி தங்களது கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தாமதமாக நடந்து வரும் சாலை பணியை கிராம மக்கள் நலன் கருதி விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.