குஜிலியம்பாறையில் ஆபத்தான நிலையில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி

குஜிலியம்பாறையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதி சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அங்கு தங்கி படிக்கும் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2018-07-21 22:30 GMT
குஜிலியம்பாறை,

குஜிலியம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கி படிப்பதற்காக, குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகில், கடந்த 1993-ம் ஆண்டு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி கட்டப்பட்டது. இரண்டு தளங்களாக கட்டப்பட்ட இந்த விடுதியில், தொடங்கப்பட்ட சில ஆண்டுகள் வரை மாணவர்கள் அதிகளவில் தங்கி படித்து வந்தனர்.

போதிய பராமரிப்பு இல்லாததால் நாளடைவில் விடுதி கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் விட தொடங்கியது. மேலும் கட்டிடத்தின் மேல் பகுதியில் சிமெண்டு பூச்சு உடைந்து கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டிருக்கின்றன. இதனால் ஒரு அறையில் மட்டுமே 20 மாணவர்கள் தங்கியுள்ளனர். மேலும் தரை தளத்தில் உள்ள கழிப்பறை, குளியலறை ஆகியவற்றின் மேல் பகுதியில் கம்பிகள் வெளியே தெரிந்தபடி உள்ளதால், எப்போது வேண்டுமானாலும் மேற்கூரை இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் இந்த விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் குஜிலியம்பாறை, பாளையம், கூட்டக்காரன்பட்டி, கரிக்காலி ஆகிய பகுதிகளை சேர்ந்த 30 மாணவர்கள் தற்போது இந்த விடுதியில் தங்கி படிக்க சேர்க்கப்பட்டனர். கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதால் 10 பேர் விடுதியில் தங்காமல் வீடுகளுக்கு சென்றுவிடுகின்றனர்.

தங்கும் விடுதி கட்டிடம் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளதால் இங்கு தங்கி படிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஒரு வித அச்சத்துடனேயே உள்ளனர். இதனால் தங்கும் விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்