கடலூரில் மாற்றுத்திறனாளி வாலிபர், கடலில் 5 கிலோ மீட்டர் நீந்தி சாதனை

கடலூரில் மாற்றுத்திறனாளி வாலிபர், கடலில் 5 கிலோ மீட்டர் நீந்தி சாதனை படைத்தார்.

Update: 2018-07-21 22:00 GMT

கடலூர் முதுநகர்,

கடலூர் என்.சி.சி. கப்பல் படை சார்பில் கமாண்டர் தினகரன், லெப்டினன்ட் காமாண்டர் சிவசங்கரன் தலைமையில் 12 மாணவிகள் உள்பட 42 பேர் கடந்த 10–ந் தேதி புதுவையில் இருந்து கடலூர் வழியாக தூத்துக்குடி வரை கடலில் சாகச பயணம் மேற்கொண்டனர். அவர்கள் நேற்று முன்தினம் மாலை கடலூர்துறைமுகம் வந்தனர். பின்னர் நேற்று காலை புதுவைக்கு புறப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து சென்னை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாலிபர், கடலில் நீந்தி சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இன்றைய இளைஞர்கள் மத்தியில் உள்ள தாழ்வு மனப்பான்மை நீங்கவும், எதிர்காலத்தில் வரும் சாவல்களை சந்திக்க கிடைக்கிற வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி முழுமுயற்சியுடன் தன்னம்பிக்கையோடு உழைத்தால் சாதனை படைக்கலாம் என்பதற்கு உதாரணமாக மனதளவிலும், உடல் அளவிலும் வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவர் ஸ்ரீராம்சீனிவாஸ் (25) என்பவர் என்.சி.சி. மாணவர்களின் பாய்மர படகு பயணம் செய்யும் போது கடலூர் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் கடலில் நீந்தி சாதனை படைத்தார். இந்த சாகச நிகழ்ச்சியை கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு வீரராகவன் தொடங்கி வைத்தார்.

அப்போது புதுவை குழுமத்தின் தலைவர் கர்னல் ஜெயசந்திரன், கோவை குழும தலைவர் பீட்டர், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, என்.சி.சி. அதிகாரிகள் பிரேம்குமார், ஜான்ராபர்ட், மோகன் ஆரோக்கியராஜ், வளனார் ஆரோக்கியதாஸ் மற்றும் துறைமுக அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்