சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆனந்தமாக குளியல் போட்டனர்.

Update: 2018-07-21 22:30 GMT
உத்தமபாளையம்,

ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக வந்து கம்பம் அருகே சுருளி அருவியாக கொட்டும். சுருளி அருவிக்கு தினந்தோறும் தேனி மற்றும் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஹைவேவிஸ் மலைப்பகுதியில் சமீபத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் கடந்த 6 நாட்களாக தடைவிதித்து இருந்தனர்.

இந்தநிலையில் தண்ணீரின் அளவு குறைந்ததால் நேற்று காலை 11 மணியில் இருந்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலில் ஈடுபட்டனர். குச்சனூர் சனீஸ்வரன் கோவிலில் ஆடித்திருவிழா தொடங்கியுள்ளதால் கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் சுருளி அருவிக்கு சென்று வருகின்றனர். இதனால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் இடத்தில் போலீஸ் பாதுகாப்பு இல்லை. எனவே அருவி பகுதியில் பெண் போலீசார் உள்பட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்