பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க ‘‘ரோபோ’’ ஆட்கள் இறங்கி சுத்தம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை
பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்கும் ‘‘ரோபோ’’ எந்திரம் தமிழகத்தில் முதல் முறையாக கும்பகோணத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பாதாள சாக்கடையில் ஆட்கள் இறங்கி சுத்தம் செய்வதை தவிர்ப்பதற்காக இந்த ரோபோ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.;
கும்பகோணம்,
உலகத்தில் அறிவியல் தொழில் நுட்பங்கள் முன்னேறிக்கொண்டே இருந்தாலும், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க ‘‘ரோபோ’’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் கடந்த 2008–ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு, இதுவரை 19 ஆயிரத்து 421 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கு பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்க வசதியாக ‘‘மேன்ஹோல்’’ எனப்படும் ஆளிறங்கும் குழாய்கள் 5 ஆயிரத்து 309 அமைக்கப்பட்டுள்ளன.
கும்பகோணம் நகரத்தில் மொத்தம் 125 கிலோ மீட்டர் நீளத்துக்கு பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை குழாயில் அடிக்கடி ஏற்படும் அடைப்புகளால், கழிவு நீரை அப்புறப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. விஷவாயு தாக்கும் அபாயம் இருப்பதால் பாதாள சாக்கடை குழாயில் ஆட்கள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
ஆனாலும் தவிர்க்க முடியாத நேரங்களில் துப்புரவு தொழிலாளர்கள், பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதை தவிர்ப்பதற்காக தமிழகத்திலேயே முதல் முறையாக கும்பகோணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்கும் ரோபோவை, கேரள மாநிலத்தை சேர்ந்த விமல்கோவிந்த் என்ற என்ஜினீயரும், அவருடைய குழுவினரும் சேர்ந்து உருவாக்கி உள்ளனர். இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோவை கும்பகோணம் நகராட்சி வாங்கி உள்ளது.
இந்த ரோபோ, கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி சந்திப்பில் உள்ள பாதாள சாக்கடை ஆளிறங்கும் குழாயில் நேற்று பரிசோதித்து பார்க்கப்பட்டது. அப்போது நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ், கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார், கும்பகோணம் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி ஆகியோர் ரோபோவின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து கும்பகோணம் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:–
கும்பகோணம் நகராட்சியில் பாதாள சாக்கடை ஆளிறங்கும் குழாய்களில் தொழிலாளர்கள் இறங்கி சுத்தம் செய்வதை தவிர்க்க ரோபோ எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எந்திரத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் நகராட்சிக்கு வழங்கி உள்ளது.
கும்பகோணம் நகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் 45 வார்டுகளில் 10 ஆயிரம் வீடுகளுக்கு புதிதாக பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட உள்ளது. 49 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் பதிக்கும் பணியும், 1,200 ஆளிறங்கும் குழாய் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. ரோபோ மூலமாக பாதாள சாக்கடைகளை எளிதாக சுத்தம் செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எந்திரத்தை உருவாக்கிய என்ஜினீயர் விமல்கோவிந்த் கூறியதாவது:–
பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இறக்கின்றனர். இந்த அசம்பாவிதத்தை தவிர்ப்பதற்காகவே ரோபோ வடிவமைக்கப்பட்டது. 60 கிலோ எடை கொண்ட இந்த ரோபோவில் 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் தரைக்கு மேலே இருந்தபடி மானிட்டர் மூலம் கண்காணித்து பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய முடியும்.
பாதாள சாக்கடை குழாய்க்குள் 6 மீட்டர் தூரத்துக்கு இந்த ரோபோ நுழைந்து செல்லும். 7 மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு 2 ரோபோக்களை வழங்கினோம். தற்போது கும்பகோணம் நகராட்சிக்கு ஒரு ரோபோவை வழங்கி இருக்கிறோம். இந்த ரோபோவின் முழு மதிப்பு ரூ.17 லட்சம் ஆகும். இதை இயக்குவதற்கு துப்புரவு தொழிலாளர்களுக்கு ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.