காலவரையற்ற வேலைநிறுத்தம்: லாரிகள் ஓடாததால் காய்கறி-பழங்கள் தேக்கம், ரூ.10 கோடி வர்த்தகம் பாதிப்பு
லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தால் பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை. இதன்காரணமாக, காய்கறி-பழங்கள் தேங்கியதால் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல்,
தினந்தோறும் டீசல் விலையை நிர்ணயிப்பதை நிறுத்திவிட்டு 3 மாதத்துக்கு ஒரு முறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும். டீசலுக்கான வரியை ஜி.எஸ்.டி.யுடன் இணைக்க வேண்டும். லாரிகளுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு தொகை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் நேற்று 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டன. திண்டுக்கல் முருகபவனத்தில் உள்ள லாரி செட் உள்பட பல்வேறு இடங்களில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக, அரிசி, பழங்கள், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மட்டுமின்றி தொழிற்சாலைகளுக்கு தேவையான கச்சாபொருட்களும் வரவில்லை.
இந்த வேலைநிறுத்தத்தால் காய்கறிகளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், லாரி டிரைவர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் உள்பட பல்லாயிரக் கணக்கானோர் வேலை இல்லாமல்தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட லாரி உரிமையாளர்கள் நல சங்க தலைவர் எல்லப்பனிடம் கேட்டபோது, ‘லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு அனுப்ப இருந்த காய்கறி, பழங்கள் போன்றவை தேங்கி கிடக்கின்றன. இதன்மூலம் நேற்று மட்டும் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும், டீசல் நிரப்புதல், சுங்கச்சாவடி கட்டணம், வரி செலுத்துதல் போன்றவை மூலம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’ என்றார்.