பைகுல்லா சிறையில் உணவு சாப்பிட்ட பெண் கைதிகளுக்கு வாந்தி, மயக்கம் 2 கர்ப்பிணிகள் உள்பட 81 பேருக்கு சிகிச்சை
பைகுல்லா சிறையில் காலை உணவு சாப்பிட்ட கர்ப்பிணிகள் உள்பட 81 பெண் கைதிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மும்பை,
பைகுல்லா சிறையில் காலை உணவு சாப்பிட்ட கர்ப்பிணிகள் உள்பட 81 பெண் கைதிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வாந்தி, மயக்கம்
மும்பை பைகுல்லா பெண்கள் சிறையில் 312 பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு தான் சீனா போரா கொலை வழக்கில் கைதான அவரது தாயார் இந்திராணியும் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் ஜெயிலில் கைதிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில், உணவு சாப்பிட்ட சில மணி நேரத்தில் பெண் கைதிகள் சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிறு வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. முதலில் சுமார் 30 பேர் சிகிச்சைக்காக ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அடுத்த சில மணி நேரங்களில் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 81 ஆனது.
உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் கைதிகளுக்கு ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 கைதிகள் 6 மாத கர்ப்பிணிகள் ஆவர். மேலும் பெண் கைதி ஒருவரின் 4 வயது மகனும் வாந்தி, மயக்கத்துக்கு உள்ளானான்.
விஷத்தன்மை உணவா?
காலையில் வழங்கப்பட்ட உணவு விஷத்தன்மை அடைந்து கைதிகளுக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இது குறித்து சிறைத்துறை ஐ.ஜி. ராஜ்வர்தன் சின்ஹா கூறியதாவது:
3 நாட்களுக்கு முன் ஆண்கள் சிறையில் கைதி ஒருவருக்கு காலரா நோய் பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் காலரா பரவாமல் இருக்க மற்ற கைதிகளுக்கு சுகாதாரத்துறை மூலம் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில் பல பெண் கைதிகளுக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்திராணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவர் நலமாக இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.